பக்கம் : 287
 

இரண்டு கண்டத்துள் பரதகண்டம் தெற்கின் கண்ணது என்க.

( 153 )

பரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக
இலங்கி நின்றது

392. மற்றது மணிமய மாகிக் கற்பகம்
பொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்
முற்றிய வூழிமூன் றேற மீள்வழிப்
பிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்.
 

     (இ - ள்.) அது - அப்பரத கண்டமானது, மணிமயம் ஆகி - மிகுந்த செல்வம்
அமைந்ததாகி, கற்பகம் - கற்பகமரத்தையும், பொற்றிரள் - சங்கநிதி பதுமநிதி முதலிய
ஒன்பது வகைச் செல்வத்தையும், அணிபொழில் - அழகிய பொழில்களையும் உடையதாய்,
போக பூமியாய் - இன்ப நிலமாய் அமைந்திருந்து, முற்றிய ஊழி மூன்று ஏறி மீள்வழி -
நிரம்பப்பெற்ற ஊழிக் காலங்கள் மூன்று முடிந்து நிரம்பியவிடத்து, பிற்றகையூழி - பிற்பாடு
உண்டான ஊழிக்காலத்திலே, இவண் பிரமர் தோன்றினார் - இங்கு நான்முகர்
தோன்றினார் (எ - று.)
நான்காவது ஊழிக்காலத்தே இங்கு நான்முகர் தோன்றினார் என்க.

( 154 )

போக காலம் கழிதல்

393. வெங்கதிர்ப் 1பரிதியும் விரவு தண்பனி
அங்கதிர் வளையமு மாதி யாயின
2இங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை
பொங்கிய புரவியாய் போக காலமே.
 

     (இ - ள்.) பொங்கிய புரவியாய் - மிகுதியான குதிரை களையுடையவனே!
வெங்கதிர்ப் பரிதியும் - வெவ்விய ஒளியினையுடைய ஞாயிறும், தண்பனி விரவு அங்கதிர்
வளையமும் - மிகுந்த குளிர்ச்சியானது பொருந்தப்பெற்ற திங்கள் வட்டமும், ஆதியாயின -
முதலாயினவற்றை, இங்கு இவர் படைத்தனர் - இவ்வுலகத்தில் நான்முகனானவர்
உண்டாக்கினார், போக காலம் இவ்வகை இழிந்தது - போக பூமியாக அமைந்திருந்த
காலமானது இவ்வாறு சென்றது (எ - று.)


(பாடம்) 1. பகுதியும். 2. இங்கிவை.