(இ - ள்.) ஊழி மூன்றாவது ஓய்ந்து - ஊழிக்காலமானது மூன்றாவது முடிவுபெற்று, இறுதி - அதன் பிறகு, மன்உயிர் சூழ்துயர் பலகெட - தோன்றி நிலைபெற்ற உயிர்த்தொகைகளைச் சூழ்ந்துள்ள துன்பங்கள் அனைத்தும் ஒழிய, ஆழி அம்கிழமை எம் அடிகள் - அழகிய அறவாழியை உரிமையாகத் தாங்கிய எம்முடைய அருகக் கடவுள், ஈண்டு அருள் சோதி மூர்த்தியாய் தோன்றினார் - இவ்வுலகத்திற்கு அருள்புரிகின்ற ஒளி வடிவினராக எழுந்தருளினார் (எ - று.) பலவும் எனல் வேண்டிய முற்றும்மை விகாரத்தால் தொக்கது. சோதிமூர்த்தி - ஒளிவடிவினன். ஆழி - அறவாழி. அடிகள் - அருகக் கடவுள். |
(இ - ள்.) உலகம் - இவ்வுலகத்தினர், ஆர் அருள் தழுவிய ஆழிக்கு ஆதியாம் - நிறைந்த பேரருள் பொருந்திய அறவாழிக்கு முதல்வனாகிய, பேர் அருள் மருவியபிரான் தன் சேவடி - சீர்த்தி மிகுந்த திருவருள் பொருந்திய அருகக் கடவுளுடைய சேவடிகளை, கார்இருள் கழிதர - தம்மைப்பற்றியுள்ள அறிவின்மையானது நீங்க, கண் கவின்று - கண்ணாற் கண்டு போற்றிசெய்து, சீர் அருள் - எங்கட்குச் சிறப்பினைக் கொடுத்தருள்வாயாக, சரண்எனச் சேர்ந்தது - நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று கூறி அடைந்தனர் (எ - று.) |