பக்கம் : 292
 

எனவே, இருபத்துநான்கு தீர்த்தங்கரரும், பன்னிரு சக்கரவர்த்திகளும், ஒன்பது பலதேவரும்,
ஒன்பது வாசுதேவரும். ஒன்பது பிரதிவாசுதேவரும் என்றவாறாயிற்று. பலவர் - பலதேவர்,
கேசவர் - வாசுதேவர், வாசுதேவர் ஒன்பதின்மர்க்கும் பிரதி வாசுதேவர் ஒன்பதின்மரும்
பகைவர் ஆதலின். மாற்றவர் என்றார்.

( 192 )

அருகக் கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்

401. மன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்
பொன்னவிர் போதன முடைய பூங்கழல்
1கொன்னவில் வேலவன் குலத்துட் டோன்றினால்
அன்னவன் கேசவர்க் காதி யாகுமே.
 

     (இ - ள்.) மன்னவ - பரதனே! நின்மகன் மரிசி - நின் மகனாகிய மருசி என்பவன்,
மாற்று இடைப்பொன் அவிர் - மாற்றுயர்ந்த சிறந்த பொன்னாலாகிய மாளிகை
விளங்குகின்ற, போதனம் உடைய - போதனமா நகரத்தினை உரிமையாக வுடையவனும்,
பூங்கழல் கொல்நவில் வேலவன் குலத்துள் தோன்றினால் - அழகிய வீரக்கழலை
யணிந்தவனும் கொலைத் தொழிலைத் தோற்றத்தாலே கூறிவிளங்குகின்ற வேற்படையை
யுடையவனுமாகிய அரசனுடைய குலத்திலே பிறந்தால், அன்னவன் - அவன், கேசவர்க்கு
ஆதியாகும் - முதலாவது வாசுதேவன் ஆவான் (எ - று.)

மன்னவ - அண்மைவிளி. மரிசி. மருசி. போதனம் - போதன நகரம். போதனமுடைய வேலவன் என்றது பயாபதி வேந்தனை. கேசவர் - வாசுதேவர்.

( 193 )

அவன் அச்சுவகண்டனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான்
என்றல்

402. கேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை
காசறு வனப்பினோர் 2கன்னி யேதுவால்
ஆசற வச்சுவக் கிரீவ னாவியும்
3தேசறு திகிரியுஞ் 4செவ்வன் வௌவுமே.
 

    (பாடம்) 1. சொன்னவில். 2. கண்ணி. 3. தேசுறு. 4. செல்வனவ்வுமே.