பக்கம் : 293
 

     (இ - ள்.) கேசவனார் திறம் கிளப்பின் - அந்த முதல் வாசுதேவனுடைய
தன்மையைச் சொல்லுமிடத்து, அவன் வெண்மலை - வெள்ளி மலையிலே தோன்றும், காசு
அறுவனப்பின் ஓர் கன்னி ஏதுவால் - குற்றமற்ற அழகினையுடைய ஓர் மணமாகாத
மங்கையின் பொருட்டு, ஆசு அற - பற்றுக்கோடு நீங்குமாற, அச்சுவக்கிரீவன் ஆவியும் -
அச்சுவகண்டன் என்னும் பெயரையுடையவன் உயிரையும், தேசறு திகிரியும் -
ஆண்மையற்ற அவனுடைய ஆணையுருளையையும், செவ்வன் வௌவும் - நன்றாகக் கைப
்பற்றுவான் (எ - று.)

( 194 )

பிறகு அவன் கடவுள் ஆவன் என்றல்

403. தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே.
 

      (இ - ள்.) சீர் அணி திருமொழித் தெய்வத் தேவன் - சிறப்புப் பொருந்திய
திருவாய் மொழிகளையுடைய தேவ தேவனாகிய அருகக் கடவுள், பார்அணி பெரும்புகழ்ப்
பரத - உலகத்திலே அழகாக விளங்கும் பெரிய புகழையுடைய பரதனே! தேர் அணி
கடற்படைத் திவிட்டன் சென்று - தேர் முதலியவைகளைக்கொண்ட அழகிய
கடலைப்போன்ற படையையுடைய அத் திவிட்டனானவன் போய், பின் ஆர் அணி
அறக்கதிர் ஆழி நாதனாம் என்றனன்-பிற்பாடு ஆர்க்கால்களையுடைய ஒளி தங்கிய
அறவாழியை ஏந்தி உலகத்தைப் புரக்குந் தலைவனாவான் என்று கூறினன் (எ - று.)
ஆர் அணி - ஆத்திமாலையை அணிந்து என்று உரை கூறுவாரும் உளர். திவிட்டன்
என்றது அம்முதல் வாசுதேவனான திவிட்டன் என்பது பட நின்றது. எனவே பயாபதி
வேந்தன் மகனான திவிட்டனே முதல் வாசுதேவன் என்று உணர்த்தினானுமாம். பரத -
விளி. தெய்வத்தேவன் - தேவதேவன்; அருகன்.

( 195 )