பக்கம் : 295
 

இதுவுமது

406. 1திருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்
பொருவரு போதன முடைய பூங்கழல்
செருவமர் தோளினான் சிறுவ ராகிய
இருவரு ளிளையவ னீண்டந் நம்பியே.
 

     (இ - ள்.) திருஅமர் - திருமகள் விரும்பி யுறையும், சுரமைநாடு அணிந்து -
சுரமைநாட்டை அழகுசெய்து, செம்பொனால் பொருவு அருபோதனம் உடைய - செம்பொன்
மாளிகைகளாலே தனக்கு வேறொரு நகரும் இணையில்லாததாக விளங்கும் போதனமா
நகரத்தினை உரிமையாக வுடையவனும், பூங்கழல் - அழகிய வீரக்கழலை யணிந்தவனும்,
செருஅமர் தோளினான் - போரைவிரும்புந் தோள்களையுடையவனுமாகிய பயாபதி
மன்னனின், சிறுவராகிய இருவருள் - மக்களாகத் தோன்றிய இரண்டு பெயர்களுக்குள்ளே,
இளையவன் ஈண்டு அந்நம்பியே - இளையவனாகிய திவிட்டன் என்பவன் இங்கு
சொல்லப்பெறுகிற அக்குரிசிலேயாவன் (எ - று.)
இருவர் - விசயனும் திவிட்டனும்.

( 168 )

அவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்

407. 2கானுடை விரிதிரை வையங் காக்கிய
மானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்
தேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்
தானடைந் தமர்வதற் குரிய டையலே.
 

     (இ - ள்.) கான்உடை விரி திரை வையம் காக்கிய - காடு களையுடையதும்
கடலாலே சூழப்பெற்றதுமாகிய உலகத்தைப் புரத்தற் பொருட்டு, மானுட உடம்பினால்
மறைந்துவந்த - மக்கள் யாக்கையைக்கொண்டு தேவ வடிவந்தோன்றாமல்வந்த, அத்
தேனுடை அலங்கலான் தெய்வமார்பகம் - தேன் பொருந்திய மாலையினையுடைய
அந்தத்திவிட்டனின் தெய்வத்தன்மை பொருந்திய மார்பிடத்தை, தையல் தான் அடைந்து
அமர்வதற்கு உரியள் - சுயம்பிரபையானவள் சேர்ந்து பொருந்துவதற்கு உரிமையை
உடையவள் ஆவள் (எ - று.)


   (பாடம்) 1. திருவமை. 2. மீனுடை விரிதிரை.