பக்கம் : 296
 

சுயம்பிரபை அந்தத் திவிட்டனுக்கே உரியவள் என்று நிமித்திகன் உறுதியுடன் கூறுகிறான்.

( 169 )

திவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறல்

408. ஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய
ஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்
தாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்
வீங்கிய வுவகையன் வேந்த னாயினான்.
 

     (இ - ள்.) அவற்கு ஈந்தபின் - சுயம்பிரபையை அத்திவிட்டனுக்கு மணஞ்செய்து
கொடுத்தபிறகு, ஆழிதாங்கிய - உருளைப்படையை யேந்தியுள்ள, ஈங்கு அவன்கொன்று -
இவ்வித்தியாதர உலகத்து அரசனாகிய அவ்வச்சுவகண்டனைக் கொலை செய்துவிட்டு,
உனக்கு இரண்டு சேடியும் - உனக்குத் தென்சேடி வடிசேடி ஆகிய இரண்டிடங்களையும்,
தாங்கிய திருவினான்தரும் என்றலும் - பெருமையைத் தாங்கியுள்ள திவிட்டனானவன்
கொடுப்பான் என்று கூறுதலும், வேந்தன் வீங்கிய உவகையன் ஆயினான் -
சுவலனசடியரசன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான் (எ - று.)

திவிட்டன் சுயம்பிரபையை மணஞ் செய்தபிறகு, அச்சுவக்கிரீவனைக் கொன்று உத்தரசேடி
தட்சணசேடி ஆகிய இரண்டு இடங்களையும் நின் ஆட்சிக்கு உட்படுத்துவான் என்று
கூறியதைக்கேட்டுச், சடியரசன் மகிழ்ச்சி யடைந்தனன் என்க. அவன் -
அவ்வச்சுவக்கிரீவனை.

( 170 )

சதவிந்து தான்கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாக
திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்

409. கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா 1னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே.
 

     (இ - ள்.) கொங்கலர் தெரியலான் திறத்தில் - மணத்தை வெளிப்படுத்தும் மலரால்
தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்த மணமகனைத் தேடும்செயலில், கொள்குறி -
அறிந்துகொள்ள


    (பாடம்) 1. மொழிந்ததே.