(இ - ள்.) இளமலர் தொக்கு துதைவு இலாத சோலையும் - வாடாத மலர்கள் நிறைந்து நெருங்கப் பெறாத சோலையும், இளந்தாமரை புக்குநகாத பொய்கையும் - அழகிய தாமரைகள் பொருந்தி விளங்கப்பெறாத தடாகங்களும், விசும்புமிக்கு இளம்பிறை இலாத அந்தியும் - விண்ணின் கண்ணே மிகுந்த இளம் பிறையைப் பெற்றிராத மாலைப்போதும், மக்களை இலாதது ஓர் மனையும் - மக்கட் பேற்றினைப் பெற்றிராத ஓர் இல்லமும், ஒக்கும் - ஒரே தன்மை யமைந்தனவாக எண்ணப்பெறும் (எ -று.) மலரற்ற பொழிலும், தாமரையில்லாத பொய்கையும், பிறையில்லாத மாலைக்காலமும், மக்களில்லாத மனையும் ஒரே தன்மை அமைந்தனவென்க. |
(இ - ள்.) குலமிகு கற்பகம் - அரசகுலம் என்று மேன்மையாகச் சொல்லப்பெறுகிற கற்பக மரமானது, தாள் தனக்கு ஆக தலைமகன் - எல்லாவற்றையுந் தாங்கும் அடி மரமாகத் தலைவனையும் சாகை - அம்மரத்தின் கிளைகள், நிலைமைகொள் மனைவியா - நல்ல தன்மையைக் கொண்டுள்ள மனைவியராகவும், சாகைய நிமிர்ந்த பூந்துணர் - அக்கிளை களினின்றும் வெளிப்பட்டுத் தோன்றும் பூங்கொத்துக்கள், நலம்மிகு மக்களா - அறிவமைந்த மக்களாகவும், முதியர் தேன்களா - முதியோர்கள் தேன் |