பக்கம் : 302
 

நீ சிறப்படைந்தாய் என்றல்

418. மக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்
றொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்
நக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்
செக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்.
 

     (இ - ள்.) மக்களை இலாதவர் - பிள்ளைப்பேற்றினை யடையா தவர்கள், மரத்தொடு
ஒப்ப என்று - மரத்திற்கு நிகராவார்கள் என்று, ஒக்க நின்று உரைப்பதோர் உரையும்
மூய்த்து - உலக வழக்கத்திற்குப் பொருந்துமாறு நின்று சொல்வதாகிய ஒரு
பழிச்சொல்லையும் நின்னளவில் மறைத்து; நீர் நக்கவான் இளம்பிறை - நன்னீர்மையானது
விளங்குகின்ற இளம்பிறைத் திங்கள், வளர்ந்த - உண்டாகிய, நாட்கதிர்ச் செக்கர்வான்
அனையதோர் திருவும் எய்தினாய் - நாள்களைச் செய்யும் கதிரவன் மறைந்த
செவ்வானத்தை யொத்த அழகையும் நீ அடைந்தாய் (எ - று.)

உரை - பழிச்சொல். மூய்த்து - மூடி; மறைத்து. நீர் - நீர்மை. பிறை, சுயம்பிரபைக்கும், செக்கர்வான் வாயுவேகைக்கும் உவமைகள்.

( 180 )

சுயம்பிரபையின் பெருமை

419. மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்.
 

     (இ - ள்.) மாவினை மருட்டிய நோக்கி - மானினை மருளச் செய்த
பார்வையையுடையாய், நின் மகள் - உன்னுடைய மகளாகிய சுயம்பிரபை, நாட்பூவை
ஒளித்தேவனுக்கு - அன்றலர்ந்த காயா மலர்போன்ற ஒளிபடைத்த வாசுதேவனுக்கு;
பூவினுள் மடந்தை பொற்பூவை - தாமரை மலரில் எழுந்தருளிய பெண்ணாகிய அழகிய
திருமகளாம்; அமிர்தமாம் - அவனுக்கு அமுதம் போன்றவளாம், தெய்வமாம் -
தெய்வத்தன்மை யுடையவளுமாம்; என - என்று, ஓவில்நூல் புரோகிதன் - கெடாத
நூலறிவினையுடைய சதவிந்து நிமித்திகன், உணர வோதினான் - அறியும்படியாகக் கூறினான்(எ-று.)