பக்கம் : 303
 

நாள் பூவை ஒளித்தேவன் என மாறுக. பூவை - காயாமலர். ஆகுபெயர், தேவனுக்கு
என்றது வாசுதேவனாகிய திவிட்டனை. திவிட்டன் திருமாலாகலின் இவள் பூவினுள்
மடந்தையாகிய பொன் என்றான். அவனுக்குத் தேவியாகலின் அமிர்தம் என்றான்.
உலகிற்குத் தெய்வம் ஆம் என்றான். புரோகிதன் - சதவிந்து.

( 181 )

வாயுவேகை பதிலுரைக்கத் தொடங்குதல்

420. மத்தவார் 1மதகளிற் றுழவன் மற்றிவை
ஒத்தவா றுரைத்தலு முவகை கைம்மிக
முத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்
தொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்.
 

     (இ - ள்.) மத்தவார் மதகளிற்று உழவன் - களிப்பினையுடைய ஒழுகா நின்ற மதம்
பொருந்திய ஆண் யானைகளைச் செலுத்துவதில் வல்லவனாகிய சுவலனசடியரசனானவன்,
இவை ஒத்தவாறு உரைத்தலும் - மேற்கூறியவைகளைப் பொருந்தும்படியாகச் சொன்ன
அளவில், உவகை கைம்மிக - மகிழ்ச்சியானது மிகுதிப்பட, முத்தவாள் முகிழ் நகை அடக்கி
- முத்துப்போலும் ஒளிதங்கிய பற்கள் வெளிப்படுத்திய நகைப்பை வெளியே புலப்படாமல்
அடக்கிக்கொண்டு, மொய்குழல் - அடர்ந்த கூந்தலை யுடையவளும், தொத்துவார்
பிணையலாள் - பூங்கொத்துக்கள் அமைந்த நீண்ட மாலையை அணிந்தவளுமாகிய
வாயுவேகை, தொழுது சொல்லினாள் - அரசனை வணங்கிச் சொல்லலானாள். மற்று,
அசைநிலை (எ - று.)

அரசன் தன்னைப் புகழ்ந்து பேசியதைக் கேட்ட வாயுவேகை தன் பணிவுடைமையைப்
புலப்படுத்திப் பேசத் தொடங்கினாள் என்க,

( 182 )

சுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்

421. மின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்
கன்னிநின் னருளினே கருதப் பட்டனள்
மன்னவ ரருளில ராயின் மக்களும்
பின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே.
 

  (பாடம்) 1. மழகளிற்று.