(இ - ள்.) மின் அவிர் மணி முடி வேந்தர் வேந்த - ஒளி விளங்குகின்ற மணிகள் பதித்துச் செய்யப்பட்ட முடியினையுடைய மன்னர்கட்கு மன்னனாக விளங்கும் மன்னனே! இக்கன்னி நின் அருளினே கருதப்பட்டனள் - கன்னிகையாகிய இந்தச் சுயம்பிரபையானவள் உன்னுடைய அருளினால்தான் பெருமையுடையவளாக மதிக்கப்பட்டாள், மன்னவ அருள் இலர் ஆயின் - அரசர்கள் அருளற்ற கொடுங்கோலர்களாக இருப்பார்களாயின், அவர் மக்களும் பின் பெறுவது ஓர் பெருமை இல்லை - அந்த அரசர்களுடைய மக்களும் பிறகு அடையக்கூடிய ஒருவகையான பெருமையும் இல்லை (எ - று.) மன்னர்களுடைய பெருமையே அவர்களுடைய மக்களுக்கும் என்க. |
(இ - ள்.) பிடிகளை மகிழ் களிற்று அரசர் - பெண் யானைகளை மகிழ்விக்கின்ற ஆண் யானைகளையுடைய அரசர்கள், பெய்ம்மலர் முடிகளின் மணி பொர - பெய்யப்பட்ட மலர்களையுடைய முடிகளின் கண் பதித்துள்ள மணிகள் பணியும்போது தாக்குதலால், முரலும் மொய்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த, அடிகளது அருளினால் - சுவாமிகளாகிய தங்களுடைய அருளால், அம்மென் சாயல் - அழகிய மென்மையையும் சாயலையுமுடைய, இக்கடிகமழ் குழலினாள் - மணங்கமழ்கின்ற கூந்தலையுடைய இந்தச் சுயம்பிரபை, கவினும் எய்தினாள் - அழகையும் அடைந்தாள் (எ - று.) |