பக்கம் : 305
 

     (இ - ள்.) மருமணி முடியினான் - நறுமணம் மிக்க மாலையை யணிந்த மணி
முடியினைத் தாங்கிய அரசனானவன், திருமனைக்கிழத்தி தன் தேங்கொள் சின்மொழி
மகிழ்ந்து - அழகிய தன்னுடைய இல்லத்துக்குரிமை பூண்டவளாகிய வாயுவேகையின்
இனிமையைக் கொண்ட சிலவாகிய மொழிகளுக்கு மகிழ்ச்சியடைந்து, அவள் பருமணிப்பூண்
முலைமார்பிடைபாய - அவளுடைய பருத்த மணிகளாலாகிய அணிகலன்களைத் தாங்கிய
கொங்கைகள் தன்னுடைய மார்பிடத்திலே பாயவும், அருமணித் தெரியல் தேன் அழிய -
அருமையான அழகிய மாலையினின்றும் தேன் வெளிப்படவும், வைகினான் -
இன்பத்துட்டங்கினான், மற்று : அசைநிலை, (எ - று.)

தேன் அழிய என்பதற்கு, வண்டுகள் இரிந்தோட என்றும் பொருள் கூறலாம்.

( 185 )

மறுநாள் மன்னன் மன்றங்கூட்டிப் பேசுதல்

424. மற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்
கொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்
திற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்
கற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்.
 

      (இ - ள்.) கொற்றவாள் தடக்கையான் - வெற்றி பொருந்திய வாட்படையைப்
பெரிய கையிலே ஏந்திய சுவலனசடியரசன், மற்றை நாள் - அடுத்த நாளில், மகனையும்
அமைச்சர் தம்மையுங் கூவிக்கொண்டு இருந்து - மகனாகிய அருக்ககீர்த்தியையும்
அமைச்சர்களையும் அழைத்து அவை கூட்டியமர்ந்து, யான் கருதியது இற்று என்று - நான்
எண்ணியது இந்நிலை யிலேயுள்ளது என்று, தொல்லைநூல் கற்ற நாவலனது கதையுஞ்
சொல்லினான் - பழைய நிமித்தநூல் கற்ற நாவலனாகிய சதவிந்து தனக்குக் கூறிய
வரலாற்றையும் கூறினான், (எ - று.)

மேல் நிகழ வேண்டியவைகளைச் செய்தற்கு அரசன் அவையைக் கூட்டினான் என்க. மகள்
- அருக்ககீர்த்தி. இற்று - இத்தன்மைத்து. தொல்லை நூல் கற்ற நாவலன் - சதவிந்து, கதை
- அவன் கூறிய புராண கதை. கற்ற நாவலன் என்றும் பாடம்.

( 186 )