(இ - ள்.) மன்னவன் பணியொடு - சுவலனசடியரசனுடைய கட்டளையோடு, மருசி - மரீசி என்பவன்; மின்அவிர் முகில்குழாம் முழங்கும் வான்இடை வீதிபோய் - மின்னல் ஒளி வீசுகின்ற முகிற்கூட்டங்கள் ஒலியைச் செய்யும் வானவீதியிலே சென்று; சுரமை நாட்டு அகணிசூடிய - சுரமைநாட்டின் நடுவிடத்திலே பொருந்தியதாகிய; பொன்நகர்ப் புறத்தது - போதனமா நகரத்திற்கு வெளியிடத்ததான; ஓர் பொழிலின் எல்லை - ஒரு பூங்காவின் வரம்பை; துன்னினன் - அடைந்தான். (எ - று.) மருசி என்னும் பெயர் மரீசி என்றுங் கூறப்பெறும். மருசியானவன் விசும்பாறாகச் சென்றான் என்பதை இரண்டாவதடி விளக்கி நின்றது. விண்ணக வீதியில் வேறு முழக்கம் இன்மையால் “மின்னவிர் முகிற்குழாம் முழங்கும் வீதி“ என்றார். |