பக்கம் : 311
 

வண்டுகள் உண்ணுமாறு, மணம் விரிவன - மணம் பொருந்திய தேன் பெருகப் பெறுவன;
புன்கு - புன்க மரங்கள்; பொரிவிரிவன - நெற்பொரியைப் போல மலர்வன; புதுமலரன -
அன்றலர்ந்த மலர்களைக் கொண்டன; புறன் உதிர்வன - வெளியெங்கும் அம்மலர்கள்
உதிரப் பெறுவன, (எ - று.)

புன்கினினுடைய பூ பொரிப்பொரித்தாற்போல மலரும். அப்பொழிலின் கண், வகுளம் நாகம்
புன்கு என்கிற மலர்மரங்களும் நிழலைத்தரும் தளிர்பொருந்திய தேமா மரங்களும் உள்ளன
என்க. “மருவினியன, மதுவிரிவன“ என்ற இரண்டும் மலருக்கு அடைமொழி. தேமா என்பது
மாமரத்தில் ஒருவகை. புன்கம் பூ நெல்லின் பொரியைப் போன்றிருக்கும் என்பதை
“பொரிப்பூம் புன்கு“ “புன்கம் பொரியணிந்தனவே“ “புன்கு பொரி மலர“ என்பவற்றாலும்
உணர்க. இச்செய்யுளில் குற்றெழுத்துக்களே மிகுதியாகப் பயின்றன; இதனைக் குறுஞ்சீர்
வண்ணம் என்பர்.

( 1 )

சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்

432. நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்
எழினகுவன விளமலரன வெழுசண்பக நிகரம்
குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்
அழனகுவன வலர்நெரிதர வசை1நிலையவ சோகம்.
 

     (இ - ள்.) சாந்தம் - சந்தனமரங்கள்; நிழல் நகுவன - நிழலினால் விளங்குவன;
நிமிர்தழையன - மிகுந்த தழைகளையுடையன; நிறைகுளிர்வன - மிகுந்த குளிரைச்
செய்வன; எழுசண்பக நிகரம் - அங்குத் தோன்றியுள்ள சண்பகமரக் கூட்டங்கள்; எழில்
நகுவன - அழகு விளங்குவன; இளமலரன - அன்றலர்ந்த இளம்பூக்களையுடையன;
பலகுரவம் - பல குராமரங்கள்; குழல் நகுவன - வேய்ங்குழல் ஒலியைப்போல் விளங்கும்
இன்னொலியைச் செய்யும்; மதுகரநிரை குடைவன - வண்டுகளின் கூட்டங்களால் குடையப்
பெறுவன; அலர் நெரிதர - மலர்கள் நெருங்கி நிற்க, அசைநிலைய அசோகம் -
அசைகின்ற நிலைமையையுடைய அசோகமரங்கள்; அழல்நகுவன - தமது செந்நிற
வொளியால் தீயைப்பார்த்து எள்ளி நகையாடுகின்றாற் போன்ற தோற்றத்தையுடையன
(எ - று.)


(பாடம்) 1. நிலையனசோகம்.