(இ - ள்.) மல்லிகையொடு மௌவல் - மல்லிகையுடனே முல்லைகள்; வளர்கொடியன - வளருகின்ற கொடியையுடையன; மணம் விரிவன - நறுமணம் உண்டாவன; நறவம் - நறைக்கொடிகள், நளிர் கொடியன - குளிர்ச்சி பொருந்திய கொடிகளாக வளர்ந்துள்ளன; நறுவிரை அகநறுமலரன - நறுமணத்தைத் தம்முட்கொண்ட நல்ல மலர்களையுடையன; குழை மாதவி - குழைகின்ற குருக்கத்திகள், குளிர்கொடியன - குளிர்ச்சி மிக்க கொடிகளாகப் படர்ந்துள்ளன; கொகுடி - முல்லைக்கொடி; குவிமுகையன - குவிந்த மொட்டுக்களையுடையன; ஓடை - ஓடைக்கொடிகள்; உயர்திரளினொடு - சிறந்த அடித்தண்டோடு; ஒளிர் கொடியன - விளங்குகின்ற கொடிகளாகப் படர்ந்துள்ளன; ஒழுகு இணர்அன - மிகுந்த பூங்கொத்துக்களையும் உடையன (எ - று.) மல்லிகை முதலிய செடிகொடிகள் இச்செய்யுளில் கூறப்பெறுகின்றன. ஓடை - ஒருகொடி. கொகுடி செம்முல்லை என்பர். வளர்கொடி, நளிர்கொடி முதலியன வினைத்தொகைகள். |