(இ - ள்.) அது அழகு - அப்பொழிலினுடைய அவ்வாறான அழகைக் கண்டு; தன் அகம் மகிழ்வு உற - தன்மனம் மகிழ்ச்சியை அடைய; அலர்தாரவன் - மலர்ந்த மலர்களினாலே தொடுக்கப்பெற்ற மாலையைப் புனைந்த மரீசியானவன்; அடைய - பொழிலைச் சேர; இது அழகியது - இஃது அழகாக இருக்கின்றது; இவண் வருகஎன - இவ்விடத்தே வருவாயாக என்று, எழுபுள் ஒலி - தோன்றுகின்ற பறவைகளின் ஒலியால்; இகவா - அடைந்த இடத்தைவிட்டு நீங்கி; விதி - முறைப்படி; வழகுஉடை - வழுவழுப்பை உடைய, விரிஇலையிடை - பரந்துள்ள இலைகளினிடையே; வெறி விரவியவேரி - நறுமணம் பொருந்திய தேனைக் கொண்டனவும்; பொதி அவிழ்வன - முறுக்கு விடுபடுவனவுமான; புதுமலர் - புதிய மலர்களைக்கொண்ட; அணி - அழகிய; பொய்கைக் கரைபுக்கான் - தடாகத்தின் கரையிலே போய்ச் சேர்ந்தான். (எ - று.) பறவைகள் வரவேற்புக் கூறுதலைப்போன்று ஒலிக்க மருசி பொய்க்கைக்கரையை அடைந்தான் என்க. வழகு இலைசெறிபுள்ளி என இயம்பலும் பொருந்தும். |