(இ - ள்.) புனல் விரவிய துளிர்பிதிர்வது - நீர் இடையிலே பொருந்தப்பெற்ற துளிர்கள் பரவப்பெற்றதும், புரிமுத்து அணி - வலம்புரியினின்று தோன்றிய முத்துக்களினால் அழகுபடுத்தப் பெற்ற; மணல்மேல் - மணல்மீது; மினல்விரவிய சுடர்பொன் ஒளிர் - மின்னுதல் அமைந்த ஒளிர்கின்ற பொன்னினாலியன்று விளங்குகின்ற; மிளிர் வேதிகைமிகை - ஒளியையுடைய திண்ணையின் மேலிருப்பதும், ஒள்கனல் விரவிய மணி இடை - ஒளிவிளங்குந் தீயின் தன்மை பொருந்திய மணியையிடை யிடையே கொண்டுள்ள, கனகம் - பொன்போன்று, கணி அணிதிரளின் - வேங்கை மலரின் அழகிய கூட்டத்தில்; அனல்விரவிய அலர் அணியது - அனலின் தன்மை பொருந்திய மலரின் மிகுதியைக் கொண்டதுமான; ஓர் அசோகம் அது கண்டான் - ஓர் அசோகமரத்தை மரீசியானவன் பார்த்தான். (எ - று.) மருசி அசோக மரத்தைக் கண்டான் என்க. அந்த அசோக மரம் புனல்விரவிய தளிர் பரவப் பெற்றுள்ளது; செம்மணியை இடையே கொண்ட பொன்போன்ற வேங்கை மலர்கள் விளங்குமாறு அவ்வேங்கை மலரினிடையே உதிர்ந்த செந்நிற மலர்களைக்கொண்டது என்க. பொன் வேதிகையைச் சுற்றி மணலிருத்தலை “புரிமுத்தணி மணல்மேல் சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை“ என்று கூறப்பெற்றது. வேங்கைமலர் கனகத்தையும் அசோகமலர் செம்மணியையும் ஒத்திருக்கும் என்க. |