பக்கம் : 319
 

புனல்கொடி மலர்த்தொகை - புனலிக்கொடியின் மலர்கள்; புதைத்த பொலிதாரோய் -
மிகுதியாகக்கொண்டு கட்டப்பெற்று விளங்கும் மாலையையுடையவனே; நினக்கு என
இயற்றிய - உனக்கென்றே அமைக்கப்பெற்ற; நிலாநிழல் மணிக்கல் - திங்களொளியை
அழகாகக்கொண்ட இந்தக் கல்லின்மீது; மனக்கு - மனதிற்கு; இனிதின் ஏறினை -
இனிமையுண்டாகும்படியாக ஏறி; மகிழ்ந்து இருமின் என்றான் - மகிழ்ந்து இருப்பாயாக
என்று கூறினான். (எ - று.)

விஞ்சையர்கள் மலைமீது வாழ்பவராகலானும் மலைமேல் முகில்கள் தங்குவதனால் அங்கு
மின்னற்கொடி குறுக்கிட்டுப் பாயுமாகலின், மருசிக்கு ‘மினற்கொடி விலங்கிய விலங்கன்
மிசைவாழும்‘ என்னும் சிறப்புக் கொடுக்கப்பட்டது. நிலாநிழற் கல் விஞ்சையன்
தங்குவதற்காகவே பயாபதி மன்னனால் அமைக்கப்பெற்றது. மனக்கு, அத்துச் சாரியை
தொக்கது. இருமின் - ஒருமை பன்மை மயக்கம்.

( 11 )

‘இது பொழிற்கடவுளுக்காக ஆக்கப்பெற்ற
பொன்னிடம் அன்றோ?‘ என்று மரீசி கேட்டல்

442. அழற்கதி 1ரியங்கற வலங்கிண ரசோகம்
நிழற்கதிர் மரத்தகைய தாக2நினை கில்லேன்
3பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்
றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்.
 

     (இ - ள்.) அழல்கதிர் இயங்குஅற - தீயையொத்த ஒளியையுடைய கதிரவன்
இயங்குதல் ஒழியும்படி; அலங்கு இணர் அசோகம் - அசைகின்ற பூங்கொத்துக்களையுடைய
இந்த அசோகத்தை; நிழல்கதிர் மரத்தகையது ஆக - நிழலைத் தருகின்ற ஒளியையுடைய
மரத்தன்மையைக் கொண்டதாக; நினைகிலேன் - நான் நினைக்கவில்லை; இது
பொழிற்கடவுள் பொன்இடம் - இஃது இப்பொழிலுக்குரிய கடவுளின் அழகிய இடமாகும்.
புகுமாறு என்னை என்று - இதில் நான் ஏறி அமர்வது எவ்வாறு என்று; எழில்கதிர்
விசும்புஇடை இழிந்தவன் - அழகிய ஒளியுள்ள விண்ணினின்றும் இறங்கியவன்;
மொழிந்தான் - சொன்னான். (எ - று.)


(பாடம்) 1. இயங்கா. 2. நினைக்கல்லேன். 3. மொழிக்கடவுள்.