(இ - ள்.) நிலாவளர் - திங்களொளி மிகுகின்ற; நிழல் கதிர் - ஒளிப்பிழம்புகளைக் கொண்ட திங்களால், நிமிர்ந்து ஒளி துளும்பும் - பேரொளி நிரம்பப்பெற்ற; சிலாதலம் இதற்கு - நிலாநிழல் கல்லிருக்கையாகிய இதனில்; உரியது தெய்வம் எனல் வேண்டா - உரிமையோடு அமர்ந்திருக்கத் தக்கது தெய்வந்தான் என்று எண்ணுதல் வேண்டாம்; உலாவிய கழல் தகையினிர் - போக்கு வரவு செய்கின்ற அடிகளைக் கொண்ட நல்ல பண்பமையப் பெற்றீர்; அவர் - இதில் அமர்ந்திருத்தற்கு உரியவர்; ஆவீர் - நீவிரேயாவீர், அலாதவர் - நீவிரல்லாத பிறர்; இதற்கு - இந்நிலா நிழற்கல்லில் அமர்தற்கு; உரியர் அல்லர் என உரைத்தான் - உரியவர்கள் ஆகமாட்டார்க ளென்று கூறினான். (எ - று.) திங்களின் நிலவைக்கண்டால் சந்திரகாந்தக்கல் நீர்விடுந் தன்மை யுடையதாகையால், நிலாவளர் ‘நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும் சிலாதலம்‘ எனப்பட்டது. விஞ்சைத் தூதுவன் பொழிற்கடவுள் பொன்னிடம் இது‘ என்று கூறினானாதலால் அதனைமறுத்துத் துருமகாந்தன், ‘சிலாதலம் இதற்குரியது தெய்வமெனல் வேண்டா‘ என்றான். இச்செய்யுளால் நிலாவட்டக்கல் உமக்காகவே அமைக்கப்பட்டது என்று துருமகாந்தன் குறிப்பிடுகின்றான் என்க. |