பக்கம் : 322
 

கையின் கண்ணே வெற்றிபொருந்திய வேற்படையைத் தாங்கியவனுமாகிய ஒருத்தன்,
வேண்டி - விரும்பி, நின்மகற்கு ஒரு மகள் கருமம் உன்னி - நின்னுடைய மகனுக்கு
ஒப்பற்ற தன்னுடைய மகளைத் திருமணஞ்செய்து கொடுத்தலாகிய செய்கையை நினைத்து,
இன்னவன் இனைப்பகலுள் - இவ்வாறான தன்மையை உடையவன் இத்தனை நாட்களுள்,
ஈண்டு இழியும் என்றான் - இப்பொழிலிலே வந்து இறங்குவான் என்று கூறினான், (எ - று.)

வித்தியாதர உலகத்து அரசனிடமிருந்து தூதன் ஒருவன் வருவான் என்று அங்கத
நிமித்திகன் கூறிய செய்தியைத் துருமகாந்தன் இச்செய்யுளால் மருசிக்குக் கூறுகிறான்.
வேலொருவன் என்று குறிப்பித்தல் சுவலனசடியரசனை. மின்னவிர் விளங்குசுடர் ஒரு
பொருட் பன்மொழியாக அமைந்து நின்றன.

( 15 )

அச்சுவக்கீரிவனைக்கொல்வான் என்று
அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறுதல்

446. மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்
அடங்கல ரடங்கவடு 1மாழியஃ தாள்வான்
உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்
நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்.
 

     (இ - ள்.) மடங்கலை அடும்திறல் - அரிமாவைக்கொல்ல வல்ல ஆண்மையும்,
நெடுந்தகைதன் மாறாய் - மிகுந்த பெருமைக் குணமுமுடைய திவிட்டனுக்கு எதிராக,
அடங்கலர் அடங்க அடும் ஆழி அஃது - பகைவர்களையெல்லாம் ஒருங்கு சேரக்
கொல்லும் உருளைப்படையை, ஆள்வான் அவன் - கைக்கொண்டிருப்பவனாகிய
அச்சுவகண்டன், உடங்கு - ஒரு சேர, உடன்று - சினந்து, எரிதுளும்பவரும் -
தீப்பொறிபறக்க எதிர்த்து வருவான், வந்தால் - அவ்வாறு எதிர்த்து வந்தால், நடந்தவன்
நடுங்க - போர்செய்யுமாறு எதிர்த்துவந்தவனாகிய அச்சுவகண்டன் நடுக்கத்தையடையுமாறு,
நம்பி இவன் - மேன்மைக்குணமுடையவனாகிய இத் திவிட்டன், அடும்என்றான் -
கொல்வான் என்றும் அந்த அங்கதன் என்னும் புரோகிதின் அரசனிடம் கூறினான்,
(எ - று.)


(பாடம்) 1. ஆழியது வாள்வான்.