(இ - ள்.) ஆங்கவன் மொழிந்தபின் அடங்கலரை அட்டான் - அப்பொழுது அங்கதப் புரோகிதன் அவ்வாறு சொன்ன பிறகு பகைவர்களையழித்த பயாபதி மன்னன் ஆனவன், தேம் கமழ் பொழில் - தேன்மணம் வீசுகின்ற இந்தச் சோலையில், திகழ் சிலாதலம் இது ஆக்கி - விளங்குகின்ற நிலாவட்டக்கல் இதனைச் செய்து, ஈங்கு அவன் இழிந்தபின் - இவ்விடத்திலே அந்த விஞ்சையர் தூதுவன் வந்து இறங்கிய பிற்பாடு, எழுந்து எதிர்கொள் என்ன - நீயெழுந்து அவனை எதிர்கொள்வாயாக என்றுகூறி எனக்குக் கட்டளையிட்டுள்ளதனால், நீங்கலன் இருந்தனன் - நான் இவ்விடத்தைவிட்டு நீங்காதவனாக இருந்தேன், நெடுந்தகை - பெருமைக்குணமுடையவனே!, இது என்றான் - இந்த நிலாநிழற்கல்வந்த வரலாறு இதுவாகும் என்று கூறினான், (எ - று.) இச்செய்யுளால் துருமகாந்தன் நிலாவட்டக்கல் அமைக்கப்பட்ட காரணத்தைக் கூறிமுடித்தான். |