பக்கம் : 324
 
  பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை
மின்றவழ் 1விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்.
 

      (இ - ள்.) என்று அவன் மொழிந்தபின் - இவ்வாறு பொழிற்காவலனாகிய
துருமகாந்தன் கூறியபிறகு, இருந்தனன் - தூதுவனாக வந்த மரீசியும் நிலாநிழற் கல்லிலே
இனிது அமர்ந்திருந்தான், இருப்ப - மரீசியானவன் அவ்வாறு அமர்ந்திருக்க, மின்தவழ்
விளங்குகொடி வேந்தனும் - ஒளியானது, பொருந்தி விளங்குகின்ற கொடியையுடைய
பயாபதி மன்னனும், பொன் தவழ் பொருந்து இழை - பொன்னை ஓடவிட்டுச் செய்த ஏற்ற
அணிகலன்களையணிந்த, அணங்கின் அனையார் நால்வரை - தெய்வப் பெண்கள்
போல்பவரான நான்கு மகளிரை. சென்று - நீங்கள்போய், அவன் வழிச்சிரமை தீர்மின் என
- வந்துள்ள விஞ்சையர் தூதனது வழிப்பயணக் களைப்பைப் போக்குங்கள் என்று,
விடுத்தான் - அந்தப் புட்பமாகரண்டப் பொழிலுக்கு அனுப்பிவைத்தான், (எ - று.)

துருமகாந்தனுடைய வேண்டுகோளின்படி மருசி நிலாவட்டக் கல்லில் அமர்ந்தான். விஞ்சைத்
தூதனின் வருகையை உணர்ந்த பயாபதி மன்னன் மருசியின் களைப்பை நீக்குதற்கு
வேண்டியபொருள்களுடன் பணிப்பெண்களைப் பொழிலுக்கு அனுப்புகிறான்.

( 18 )

பயாபதி மன்னன் விடுத்த பாவையர்
புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப்புறப்படுதல்

449. பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப
மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்
சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர
அன்னமென வல்லவென வன்னண நடந்தார்.
 

     (இ - ள்.) பொன்அவிர் மணிக்கலை - பொன் விளங்குகின்ற மணிகளிழைத்துள்ள
மேகலை, சிலம்பொடு புலம்ப - அடிகளில் அணிந்துள்ள சிலம்பென்னும் அணியுடனே
ஒலிக்கவும், மின்அவிர் மணிக்குழை - ஒளி விளங்குகின்ற மணிகள் பதிக்கப்பெற்ற
குழையென்னுங் காதணி, மிளிர்ந்து ஒளி துளும்ப - விட்டுவிட்டு ஒளி ததும்பவும்,
சின்னமலர் - கிள்ளியிடப் பெற்ற மலர்கள், துன்னுகுழல் தேறல்ஒடு சேர - நெருங்கிய
கூந்தல்மலர்களினின்று பெருகுகின்ற தேனுடனே தாழ்ந்து விழவும்,


(பாடம்) 1. விளங்கொடி.