பக்கம் : 325
 

அன்னம்என - இம்மங்கையர்களைக் கண்டவர்களிற் சிலர் அன்னப்பறவை
இவர்கட்கு ஒப்பு என்று சொல்லவும், வேறுசிலர், அல்லஎன - அன்னப்பறவைகள்
இவர்கட்கு ஒப்பு அல்லவென்று சொல்லவும், அன்னணம் நடந்தார் - அவ்வாறு நடந்து
சென்றார்கள், (எ - று.)

அரசனேவிய பணிப்பெண்கள் பொழிலைநோக்கி நடந்து சொல்லும் போது, உடல்
அசைவதால் அவர்களுடைய மேகலையும் சிலம்பும் ஒலி செய்தன. அவருடைய
மணிக்குழைகள் விட்டுவிட்டு ஒளிதுளும்பின. சூடிய மலர்களினின்றும் பெருகுகின்ற
தேனோடு கூந்தல் சோர்வதாயிற்று. அவர்கள் நடப்பதைக்கண்டு சிலர், ‘அன்னந்தான்
நடந்து செல்லுகின்றன‘ என்று மயங்கிக்கூறத், தெளிந்த அறிவினை யுடையவர்கள் அவர்கள்
சொல்லை மறுத்து ‘அன்னம் செல்லவில்லை மகளிரே செல்லுகின்றனர்‘ என்றுகூற மகளிர்
நடந்து சென்றார்கள் என்க. சின்னமலர் கிள்ளியிடப்பெற்ற மலரையன்றி விடுதிப் பூவையுங்
காட்டும்.

( 19 )

450. நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ
தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி
விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த
மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண்.
 

     (இ - ள்.) நலம்கனி மடந்தையர் - அழகுமிகுந்த அந்தப் பெண்கள், நடத்தொறும் -
நடக்குந்தோறும், இணர்ப்போது அலங்கல் அளகக்கொடி - கொத்தாக அமைந்த
மலர்களைக் கொண்டு கட்டப்பெற்ற மாலையினை யணிந்த கூந்தலாகிய கொடியின், அயல்
- பக்கத்தே, சுடர - ஒளிருமாறு, ஓடி - சென்று, விலங்கு - விலகாநின்ற, புருவக்கொடி -
புருவங்களாகிய கோடிகள், முரிந்து - நெரிவுற்று, வெருவெய்த - அச்சமெய்த, மதர்த்த -
மதர்ப்புடைய, அவர் - அம்மகளிரின், கண் - கண்கள், மலங்கின விலங்கின - சுழன்று
பிறழ்வனவாயின, (எ - று.)

அழகுடைய அம்மகளிர்கள் நடக்குந்தோறும் அவருடைய மதர்த்த வாள்போன்ற கண்கள்,
அவர் செவியோரத்தே கிடக்கும் அளகம்வரையோடிச் சுழன்று புருவக்கொடி அஞ்சி
நெரிந்து மேலேறுமாறு பிறழ்வன வாயின என்க. கண் வாள்போறலின் கொடிபோன்ற
புருவம் அஞ்சி முரிந்தன என்றபடி.

( 20 )