(இ - ள்.) நிலைத் தொழில - பிறவிகளிலே சுழலாதபடி நிலைபெறுத்தும் தொழில் உடையவாய், உளம் - மாந்தர் மனங்கள், வென்று - பொறிகளை அடர்த்து வென்று, நினைத்து - தியானித்து, ஒழுக - தவத்திலே நின்று ஒழுகுமிடத்தே, இன்பக் கலைத்தொழில்கள் - காமநூல் கூறும் தொழில்கட்கும், காமன், எய்கணைத் தொழில்கள் - மதவேள் எய்யாநின்ற மலர்க்கணைகளின் தொழில்கட்கும், முலைத்தொழில் - மகளிரின் முலைகள் முனிகின்ற தொழில்கட்கும் பிறப்பிடமாகிய, கொலைத்தொழில் கொள் - கொல்லுந் தொழிலைக்கொண்ட, வாள் - வாள்போன்ற, கணின் அகத்த - கண்ணிடத்தே உண்டாகின்ற, குறி - காமக் குறிப்பு, சிலைத்தொழிலின் - வில்லாலே செய்யுந்தொழிலைப் போன்று, ஆருயிர் - அவருடைய சிறந்த உயிரை, முருக்கும் - கொல்லாநிற்கும், (எ - று.) வீடுபேற்றைக் கருதிப் பொறிகளை வென்று தியானஞ் செய்யுமிடத்தே இம்மகளிரின் கட்குறி அவர்களைக் கொல்லாநிற்கும் என்பதாம். வேளைவென்ற முகத்தியர் வெம்முலை ஆளைநின்று முனியும், என்பதனால் முலையின் தொழிலை உணர்க. |