பக்கம் : 329
 
456. சுரும்பொடு சுழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு 1நடந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு2பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே.
 

      (இ - ள்.) குழல்தொகை சுரும்பொடு சுழன்றுள - அந்த மங்கையர்களுடைய
கூந்தல் தொகுதி வண்டுகளோடு சுழலுதலையுடைய, எழில்கை கரும்பொடு கலந்துள -
மன்மதனுடைய அழகிய கையிடத்ததாகிய கரும்பின் சுவையோடே பொருந்துதல் உடையன;
களித்த - காமக்களிப்புடைய, அவர் - அம்மகளிரின், தீம்பண் - இன்னிசைப்பாடல்,
விரல்தலை - அவர் விரல்களின் நுனி, நரம்பொடு நடந்துள - யாழினது நரம்போடே
நடத்தலை உடையன, துவர் வாய் அமிர்தம் - அவருடைய செவ்விய பவளம்போன்ற வாயின் ஊறல், எயிற்று ஏர் அரும்பொடு - பற்களாகிய அழகிய முல்லையரும்போடே,
பொலிந்த - பொலிவுற்று விளங்கின, (எ - று.)

இது மகளிர்கள் யாழ்வருடிப் பாடுதல் கூறிற்று. கரும்பு - மதவேளின் வில்லாதலின்,
எழிற்கைக் கரும்பென்றார். தீம்பண் - கரும்பு போன்று சுவையுடையன என்க.

( 26 )

457. கணங்குழை மடந்தையர் 3கவின்பிற ழிருங்கண்
அணங்குற விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்.
 

     (இ - ள்.) மைந்தர்தம் மனம் - இளங்காளையருடைய மனம், கணம்குழை -
கொத்தாகிய குழையினை அணிந்த, மடந்தையர் - இம்மடந்தையருடைய, கவின் - அழகிய,
பிறழ் - பிறழுகின்ற, இருங்கண் - கரிய விழிகள், அணங்குற - வருந்தும்படி, விலங்குதொறு
- பிறழுந்தோறும், அகம் புலர - உள்ளிடம் வற்ற, வாடி - வாட்டமுற்று, தாழ்வணங்கு
இடை - தாழ்ந்து ஓசியும் இடை, வணங்குதொறு - நுடங்கும்தோறும், அணங்கென - இவை
நம்மைத் தீண்டி வருத்தும் தெய்வம் என்றஞ்சி, வணங்கும் - வணங்கா நிற்கும், (எ - று.)

மைந்தர் மனம் அம்மகளிரின்கண் பிறழுந் தோறும் வாடி இடை வணங்குந்தோறும்
வணங்கும் என்க.

( 27 )


(பாடம்) 1. சிவந்துள. 2. பொலிந்ததகை. 3. பிறழவிரு செங்கண்.