(இ - ள்.) என்று - மேற்கூறியவாறு, மைந்தர்கள் இடர்உற - காளையர்கள் துன்பத்தையடைந்து வருந்த, எழுதிய கொடிபோல் - எழுதப்பெற்ற ஓவியக் கொடியைப்போல, சென்று - போய், கற்பகவனம் அன - கற்பகச் சோலையைப் போன்ற, செறிபொழில் அடைந்தார் - மரஞ்செடி கொடிகள் நெருங்கப்பெற்ற பூங்காவை அடைந்தார்கள், இன்று - இன்றைக்கு, காமுகர் படையினை இடர்பட நடந்த - காமநோக்க முடையவர்களுடைய கூட்டம் துன்பத்தை யடையுமாறு சென்ற, வென்றி - வெற்றியை, காமனுக்கு உரைத்தும் என்று - காமனுக்குச் சொல்லுவோம் என்று, அளி இரைத்து விரைந்த - வண்டுக் கூட்டங்கள் ஒலிசெய்துகொண்டு விரைந்து சென்றன, (எ-று.) காளையர் உள்ளத்தைக் கலக்கியவாறே மங்கையர்கள் பொழிலை யடைந்தார்கள். அம்மங்கையரின் செயலைக் காமற்குரைப்பான் கடுகிச் செல்லுதலைப் போன்று வண்டுக்கூட்டங்கள் விரைந்து சென்றன. |