பக்கம் : 340
 

இயல்புகள் நினையா - அழகியதன்மைகளையெல்லாம் எண்ணிப்பார்த்து, மகிழ்ந்து
இருந்தான்-களிப்புடன் அமர்ந்திருந்தான். (எ - று.)

மருசிக்குச் சிறப்புச் செய்தற்குவந்த மங்கையர்கட்குத் தலைவராயினார் பெயர் வயந்ததிலகை,
கல்லியாணிகை, வியந்தசேனை, கமலமாலதை என இப்பாட்டால் குறிப்பிடுகிறார். இவர்கள்
செய்யும் உபசாரத்தினை மருசி பார்த்து வியந்துமகிழ்ந்திருகின்றான் என்க.

( 42 )

வேறு
பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை
அழைத்தற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்

473. ஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்
வீங்கெழிற் பொலிந்ததானை வேந்தனேவ வீவில்சீர்ப்
பூங்கழற் பொலங்1குழைத் திவிட்டனோடு போர்க்கதந்
தாங்கெழிற் பெருங்கையானை சங்கவண்ண னேறினான்.
 

     (இ - ள்.) ஆங்கு எழில் பொலிந்தவன் இருந்தபின் - அப்புட்பமாகரண்டப்
பூங்காவிலே அழகிற் சிறந்து விளங்குபவனாகிய மரீசியானவன் நிலா நிழற்கல்லிலே
அமர்ந்திருந்த பிற்பாடு, அலங்குதார் - அசைகின்ற மாலையினையும், வீங்கு எழில் -
மிகுந்த அழகையும், பொலிந்ததானை - விளங்குகின்ற படையையுமுடைய, வேந்தன் ஏவ -
பயாபதி மன்னன் விஞ்சையர் தூதுவனாகிய மரீசியை அழைத்து வருமாறு கட்டளையிட,
வீவு இல்சீர் - அழிதலில்லாத சீர்த்தியையுடைய, பூங்கழல் பொலங்குழைத் திவிட்டனோடு -
அழகிய வீரக்கழலையும் பொன்னினால் ஆகிய காதணியையும் அணிந்த திவிட்டனோடு,
சங்கவண்ணன் - சங்கின் நிறம்போன்ற வெண்ணிறத்தையுடைய விசயன், போர்க்கதம் -
போர்செய்யுந் தன்மையுள்ள சினத்தைக் கொண்டதும், தாங்கு எழில் பெருங்கையானை
ஏறினான் - மிகுந்த அழகையும் பெரிய கையையுமுடையதாகிய யானைமீது ஏறினான்.
(எ - று.)
மருசியை அரண்மனைக்கு அழைத்துச் செல்லும்பொருட்டு விசய திவிட்டர்கள் புறப்பட்டு
வருதல் இதில் குறிக்கப்படுகிறது.

( 43 )


(பாடம்) 1. குழைசிலம்புதார்த் திவிட்டனொடு.