பக்கம் : 342
 

சாமரக் கூட்டங்கள் எல்லாவிடங்களினும் மூடின, வெண்கொடிக் குழாம் புதைத்த -
வெண்கொற்றக் கொடிகளின் கூட்டம் எல்லாவிடங்களையும் மறைத்தன, வேந்தர் பல்குழாம்
வேர்த்த - அரசர்களுடைய பல கூட்டங்கள் நெருக்கமுண்மையால் களைப்படைந்தன,
கூந்தல்மாக்குழாம் விரைந்த - பிடரி மயிரையுடைய குதிரைக் கூட்டங்கள் விரைவாகச் சென்றன. (எ - று.)

தேர்த்த - கலந்தன. திசைத்த - திகைத்தன. சனம் - மாந்தர்.

விசய திவிட்டர்களோடு பலவகைப் படைகளும் புறப்பட்டுச் செல்லுதல் இதில்
குறிக்கப்பட்டது.

( 45 )

விசய திவிட்டர்களைக் கண்ட விளங்கிழையார் மயக்கம்

476. பாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்
ஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்
சூடுமாலை சோரவுந்தொ 1டாரமாலை வீழவும்
மாடவாயின் மேலெலா 2ம டந்தைமார்ம யங்கினார்.
 

     (இ - ள்.) மாடவாயில் மேல்எலாம் மடந்தைமார் - விசயதிவிட்டர்களைக் கண்ட
அளவில் மாளிகைகளின் மேலிடங்களிலெல்லாம் மங்கையர்கள் கூடி, பாடுவார் - சிலர்
மகிழ்ச்சி மிகுந்து பாடலானார்கள், வணங்குவார் - சிலர் விசய திவிட்டர்களை
வணங்கலானார்கள், பலாண்டுகூறி வாழ்த்துவார் - சிலர் பல்லாண்டு கூறி
வாழ்த்தலானார்கள், ஆடுவாரோடு ஆர்வ மாந்தர் அன்னர் - ஆடுகின்றவர்களோடு
ஆர்வமிக்க சில மாந்தர் தாமும் அவர்களைப் போல மகிழ்ச்சி மிகுந்து ஆடலானார்கள்.
இன்னர் ஆயபின் - அவர் இத்தன்மையை யுடையவர் ஆன பிறகு, மடந்தைமார் -
மகளிர்கள், சூடுமாலை சோரவும் - அணிந்துள்ள பூமாலை வாடவும், தொடு ஆரமாலை
வீழவும் - அணிந்துள்ள முத்துமாலை கீழே விழவும், மயங்கினார் - அறிவு கலங்கினார்கள்.
(எ - று.)

விசயதிவிட்டர்களைக் கண்ட நகரநங்கையரின் நிலை இதில் கூறப் படுகிறது. அழகின்
மிக்காராய அக்காளையர் மங்கையர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுதலால் பாடல்
ஆடல் மயல் முதலியன உண்டாயினவென்க.

( 46 )


(பாடம்) 1. தோடர்மாலை. 2. மங்கைமார், மடந்தையர்.