பக்கம் : 348
 

     (இ - ள்.)பாடகம் - காலணி கலன்கள், துளங்கவும் - அசைந் தொலிப்பவும்,
பசும்பொன் ஓலை - பசிய பொன்னாலியன்ற காதணி, மின்னவும் - ஒளிரவும், சூடகம் -
வளையல்கள், துளும்பவும் - அசைந்தொலிப்பவும், சுரும்பு - வண்டுகள், சூழ்ந்து -
தம்மைச் சூழ்ந்து, பாடவும் - பாடா நிற்பவும், ஊடகம் - உள்ளம், கசிந்து - நெகிழ்ந்து,
ஒசிந்து - துவண்டு, நின்று - நிலையாக நின்றும், சென்று - போயும், வந்து - மீண்டு
வந்தும், உலாய் - உலாவியும், நங்கைமார் - இவ்வாற்றான் மகளிர்கள், நன்னகர் - அந்த
நல்ல நகரத்தின் கண்ணே, நாடகங்கள் - கூத்து வகைகளை, நவிற்றினார் - இயற்றா
நின்றனர். (எ - று.)

விசயனையும் திவிட்டனையும் காணச்செல்லும் மகளிர் துளங்கவும் மின்னவும் துளும்பவும்
பாடவும் கசிந்தும் ஒசிந்தும் நின்றும் சென்றும் உலாவுதல் அம்மகளிர் நாடகமாடுதல்
போலத் தோன்றிற்று என்பதாம்.

( 55 )

மாதர்கள் மயக்கம்

486. மாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்
சாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்
நீலவாணெ டுங்கணார்நி ரந்து 1நெஞ்சு தாழொரீஇ
ஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்.
 

     (இ - ள்.) நீலவாள் நெடுங்கணார் - கருமை தங்கிய வாளைப் போன்ற நீண்ட
கண்களையுடையவர்களாகிய மங்கையர், நிரந்து - எங்குங் கலந்து, மாலையால் விளங்கியும்
- மாலையுடன் சிறப்பாகக் காணப்பெற்றும், வாசம் பொன் சுண்ணம் வீசியும் - மணந்தங்கிய
பொன் பொடிகளை இறைத்தும், சாலவாயில் ஆறு - சாளர வாயில்களின் வழியாக,
சந்தனக்குழம்பு சிந்தியும் - சந்தனக் குழம்பைத் தெளித்தும், நெஞ்சு தாழ் ஒரீஇ -
நெஞ்சத்தின் தாழ்ப்பாளாகிய நிறையையுங்கடந்து, ஞாலமாளும் நம்பிமாரின் -
உலகத்தையாளும் விசய திவிட்டரின் பால், மாலும் ஆகி - காமமயக்கமும்
உண்டாகப்பெற்று, நண்ணினார் - விசயதிவிட்டரின் படைகளோடு வந்து சேர்ந்தார்கள்.
(எ - று.)
நம்பிமாரின் மாலுமாகி என்றது சிலேடை. மால் - திருமால், மயக்கம்.


(பாடம்) 1. நெஞ்சு தாழ்ந்தி ரந்து, நெஞ்சுதாழ் திறந்து.