பக்கம் : 354
 

அணிய, வௌவுநீர் - கண்டவருள்ளத்தைக் கவருந்தன்மை வாய்ந்த, வல்லி மண்டபங்கள்
சென்று - கொடிகளாலாகிய மண்டபங்களிற்போய், மாதவிக்கொழுந்து அணி - குருக்கத்திக்
கொழுந்துகளினால் அழகுபடுத்தப்பெற்ற அல்லி மண்டபத்து அயல - பூக்கள் செறிந்த
மண்டபத்திற்கு அண்மையிலுள்ள, அசோகம் ஆங்கண் எய்தினார் - அசோக மரமுள்ள
அந்த இடத்தை அடைந்தார்கள் (எ - று.)

மருசி தங்கியிருந்த அசோகமரத்தின் இடத்தை விசயதிவிட்டர்கள் அடைந்தனர் என்க.
அந்த அசோகமரம் கொடி மண்டபங்களைக் கடந்து, மாதவிக் கொழுந்து கொண்டு
அணியப்பெற்ற மலர் மண்டபத்தின் பக்கத்தில் இருந்தது என்று அசோகமரம் இருந்த
இடத்தைக் குறிப்பிட்டார்.

( 64 )

விஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்

495. பஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்
மஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்
விஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்
கஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்.
 

     (இ - ள்.) பஞ்சு இலங்கும் அல்குலார் - ஆடை விளங்காநின்ற, அல்குலையுடைய
மங்கையர், பலாண்டு கூற - பல்லாண்டு கூறி வாழ்த்த, ஆண்டுபோய் - ஆங்கே சென்று,
மஞ்சு இலங்கு அசோக நீழல் - மிகவும் ஓங்கி வளர்ந்தமையினால் முகில்கள் படியப்பெற்று
விளங்கும் அசோகமரத்தின் நிழலை, மன்னவீரர் துன்னலும் - அரசமள்ளர்களாகிய
விசயதிவிட்டர்கள் அடைதலும், விஞ்சையன் - விஞ்சையர் தூதாகவந்த மரீசியானவன்,
மகிழ்ந்து எழுந்து - களிப்புடன் இருக்கையை விட்டு எழுந்து, வென்றிவீரர் தங்களுக்கு -
வெற்றிமிக்க மன்னர்களாகிய விசயதிவிட்டர்களுக்கு, தடக்கை அஞ்சலிகூப்பி - தனது
பெரியகைகளை அஞ்சலியாகக் குவித்து, ஆர்வம்மிக்கு இறைஞ்சினான் - அன்புமிகுந்து
வணங்கினான். (எ - று.)

பஞ்சு - பஞ்சினால் இயன்ற ஆடைக்குக் காரணவாகுபெயர். பலாண்டு - பல்லாண்டு; இத்தொடர் பல ஆண்டுகள் வாழ்ந்திடுக என்ற பொருளைக் குறிப்பினால் விளக்கும்.

( 65 )