ஒளிபொருந்தியவனாகிய விசயனையும் - நீல்நிறக் கருங்கடல் நிகர்க்கும் மேனியானையும் - நீலநிறத்தைக் கொண்ட பெரிய கடலை யொத்திருக்கும் நிறமமைந்த உடலையுடையவனாகிய திவிட்டனையும், கண்மலர்ந்து - கண்களை நன்கு திறந்து, தன் நூல்நெறிக்கண் மிக்க நீர்மைஒக்க - தான்கற்ற உடலிலக்கண நூலிலே சொல்லப்பெற்ற சிறந்த தன்மைகளானவை பொருத்தமாக அமைந்திருக்கக் கண்டு, மகிழ்ந்து நின்று நோக்கினான் - மகிழ்ச்சியை அடைந்து நன்றாகப் பார்த்தான். (எ - று.) விசய திவிட்டர்களிடம் நல்லாடவர்க்குரிய குணங்குறிகள் யாவும் அமைந்திருத்தலை மருசிகண்டு வியப்புடன் நோக்குகின்றனன் என்க. விசயன் வெண்ணிறத்தா னாகையால் ‘பானிறக் கதிர்நகை பரந்தசோதி யான்‘ எனப்பட்டான். திவிட்டன் கருநிறத்தானாதலால் ‘நீனிறக் கருங்கடல் நிகர்க்கு மேனியான்‘ எனப்பட்டான். கருமை பெருமை மேற்று. |
(இ - ள்.) விஞ்சையன - மரீசியானவன, நீளநூல்கொள் சிந்தை - பெரிய நூல்களிலே சென்று அறிந்த தன்மனமும், கண்கள் தாவ - தன் கண்களும் அவர் மேற்படரா நிற்ப, வேல் கொள் தானை வீரர் தம்மை - வேற்படையைக் கையிற்கொண்ட படைவீரர்களான விசயதிவிட்டர்களை, வியந்து நோக்கி நோக்கி ஆர்கலன் - வியப்படைந்து பன்முறையும் பார்த்தும் மனநிறைவு கொள்ளாதவனாகி, உள்மகிழ்ந்து - மனதிற்குள்ளே களிப்படைந்து, கால்கள் கொண்டு கண்ணிகாறும் - அடிகள் முதற் கொண்டு முடிமாலை வரையினும், கண்கண்டு - கண்களாற் பார்த்து, மால்கொள் சிந்தையார்கள்போல - பித்தரைப்போன்று, மற்றும் மற்றும் நோக்கினான் - மேன்மேலும் பார்த்தான், (எ - று.) |