(இ - ள்.) வேரிமாலை விம்மவும் - தேன்பொருந்திய மலர் மாலை பருத்துத்தோன்றவும், விளங்குபூண் துளும்பவும் - விளங்குகின்ற அணிகலன்கள் ஒளியை வெளிப்பரப்பவும், தாரொடு ஆரம்மின்னவும் - பூமாலைகளுடனே முத்துமாலைகள் விளங்கவும், தயங்குசோதி கண்கொள - விசயதிவிட்டர்களிடத்தில் விளங்குகின்ற ஒளி கண்களைப் பறிக்கவும், ஆரநோக்க கில்லன் - பொருந்தப்பார்க்க முடியாதவனாகி, அன்னன் - அத் தன்மையினையடைந்தவன். அரச நம்பிமார்களைச்சார - அரசனுடைய சிறந்த மக்களாகிய விசயதிவிட்டர்களை நெருங்கி, ஓர் கல்தலத்து இருந்து விளம்பினான் - ஒருகல்லின்மீது அமர்ந்து சொல்லலானான், (எ - று.) விசயதிவிட்டர்களின் உடலொளி கண்களைப் பறித்தலால் விஞ்சையன் மனநிறைவு உண்டாகுமளவும் பார்க்கமுடியாதவனாய் உரையாடத் தொடங்குகின்றனன் என்க. |