பக்கம் : 360
 

இமைகள் விட்ட நோக்கம் - இமையாது பார்க்கும் பார்வை. தம்மைப் புகழ்ந்துரைத்தலைக்
கேட்டல் அறிவுடையார்க்கு நாணந் தருமாகலின் ‘அமைகமாற்றம்‘ என்றனர். அடிகளாவார்
பெரியார். அஃது ஈண்டுப் பயாபதி மன்னனை யுணர்த்திநின்றது. சுமைகொள் மாலை
என்பதற்கு வண்டுகள் மொய்த்து அரற்றுவதால் ஒலிபொருந்திய மாலை என்றும்
பொருள்கூறலாம். அவ்வாறு கூறற்குச் சும்மை சுமையென நின்றது என்று கொள்க. எருத்தம்
- கழுத்து. சிமை - மலையினுச்சி. ‘தோய்வருஞ் சிமையந்தோறும்’ என்பது பரிபாடல்.
‘சிமையமே மலையினுச்சி’ என்பது நிகண்டு. ஏறுக - அகரவீறு தொகுதல்.

( 72 )

மருசியும் விசய திவிட்டர்களும் யானைகள்மீது
தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்

503. அம்பொன்மாலை கண்1கவர்ந்த லர்ந்தசெல்வ 2வெள்ளமேய்
வெம்புமால்க ளிற்றெருத்தம் 3விஞ்சையாளன் மேல்கொளப்
பைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை4யீரு வாக்கண்மீச்
செம்பொன்மாலை மார்பர்சேர்ந்து தேவரிற்று ளும்பினார்.

 

     (இ - ள்.) விஞ்சையாளன் - மருசியானவன், அம்பொன்மாலை - அழகிய
பொன்னரிமாலை, கண்கவர்ந்து - கண்ணைப் பறித்துக்கொண்டு, அலர்ந்த - விளங்கிய
தன்மையமைந்ததும், செல்வ வெள்ளம் ஏய் - செல்வப் பெருக்கின் மிகுதியை ஒத்ததுமாகிய, வெம்பும் மால்களிற்று எருத்தம் மேல்கொள - சினக்கும் தன்மையுள்ள பெரிய யானையின்
பிடரியின்மேல் ஏறிக்கொண்டு புறப்பட, பைம்பொன்மாலை - பசும்பொன்னினாலாகிய
மாலையணிந்தனவும், வார்மதம் - மிகுந்த மதத்தையுடையனவும், பரூஉக்கை -
பெருத்தகைகளையுடையவுமான, ஈர் உவாக்கள்மீ - இரண்டு அரசயானைகளின்மேல்,
செம்பொன்மாலை மார்பர் சேர்ந்து - செம்பொன்னினாலாகிய மாலையைப் பூண்டவர்களான
விசயதிவிட்டர்கள் ஏறி, தேவரில் துளும்பினார் - தேவர்களைப் போன்ற தோற்றத்துடன்
விளங்கினார்கள். (எ - று.)

யானை மிகுந்த விலைமதிப்புடைய தாகலின் “செல்வ வெள்ளமேய் களிறு“ என்றார். மருசி
ஒரு யானையின்மீது புறப்பட விசய திவிட்டர்களும் தனித்தனியே ஒவ்வொரு
யானையின்மீது தேவர்களைப்போன்ற தோற்றத்துடன் புறப்பட்டார்கள்.

( 73 )


(பாடம்) 1. கலர்ந். 2. வெள்ளமோடு. 3. விஞ்சையானை. 4. வேழ மோரிரண்டுமீச்.