(இ - ள்.) கதிர்நகை - ஒளியினால் விளங்குதலையுடைய, கபாடவாயில் - கதவுகளைக்கொண்ட வாசல்களையும், கதலிகை கனகம் நெற்றி - கொடிகள் கட்டிய பொன்மயமான மேனிலை முகப்பினையும், மதிநக உரிஞ்சு - திங்கள்தாம் சாணை தீட்டினாற்போல் விளங்குமாறு உராய்கின்ற, கோடு - முடியையுமுடைய, மாளிகை நிரைத்த வீதி - மாளிகைகள் வரிசையாகவுள்ள தெருக்களைக்கொண்ட, புதுநகர் இழைத்து - நகரைப் புதுமை பெறஅழகுபடுத்தி; முந்து - முற்பட, பொலம்கல தொகையும் - பொன்னணிகலத் தொகுதியையும், பூவும் - மலர்களையும், எதிர் நகைத்து உகைத்து - பொழிலில் இருந்துவருகிற மருசி விசயதிவிட்டர் ஆகியோர்க்கு எதிரே மகிழ்ச்சியோடு செலுத்தி, மாதர் எதிர்கொள - மகளிர் வரவேற்க, நகரம் சேர்ந்தார் - மூவரும் போதனமா நகரத்தையடைந்தார்கள். (எ - று.) முதலிரண்டடிகள் போதனமாநகரத்தின் வருணனை. மருசி என்னும் விஞ்சையன் தூதாக வருகின்றா னாதலின், அவனைச் சிறப்பித்து மகிழ்ச்சிப்படுத்தற்கு எண்ணிய பயாபதி மன்னன் நகரை அழகுபடுத்தி அழகிய மாதர்களைக்கொண்டு வரவேற்கச் செய்கின்றனன். புதுநகர் இழைத்து என்று கூறியிருப்பினும் நகரைப் புதுமை பெற இழைத்து என்று பொருள் கொள்க. தக்கார்களை எதிர்கொள்ளும்போது பொன்மாரியும் பூமாரியும் பொழிதல் வழக்கு. முத்து என்னும் பாடத்திற்கு முத்துமாரியும் பெய்தனர் என்றுகொள்க. |