பக்கம் : 364
 

உழக்கி - ஒன்றாகச் சேறுபோலக் கலக்கப்பெற்றும், வண்டு ஆர் - வளையல் பொருந்திய,
ஒளிர்முத்தம் முறுவலார் தம் - விளங்குகின்ற முத்துப்போன்ற பற்களையுடையவரான
பெண்களின், உழைக்கலம் - உழைக்கலங்கள், கலந்து சேரப்பெற்றும், மாலை -
மாலையாகத் தொங்கவிடப்பெற்ற, குளிர் முத்தம் - குளிர்ந்த முத்துக்கள், நிழற்றும் - ஒளி
விடப்பெற்றும் உள்ள கோயில் அரண்மனையின், பெருங்கடை - பெரிய வாசலில், குறுகச்
சென்றார் - அணித்தாகச் சென்றார்கள். (எ - று.)

முத்தமணலும் செம்பொற் சுண்ணமும் சிதறிப் பூக்களுடனே அரும்பு களும் சந்தனமும்
பெய்யப்பெற்றிருப்பதால் அவைகள் குழம்பாகப்பெற்று முத்தமாலை தொங்கவிடப்
பெற்றுள்ள அரண்மனைப் பெருவாயிலை மருசியும் விசயதிவிட்டர்களும் குறுகினர் என்க.
போது - மலரும் பருவத்து அரும்பு என்பர்.

( 77 )

பயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்

508. மற்றவ ரடைந்த போழ்தின் 1வாயிலோ 2ருணர்த்தக் கேட்டுக்
கொற்றவ 3னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல
முற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்
கற்றைகள் தவழச் 4சென்றோர் கனககூ டத்தி ருந்தான்.
 

     (இ - ள்.) மற்று - பிறகு, அவர் அடைந்த போழ்தின் - மருசியும்
விசயதிவிட்டர்களும் அரண்மனையின் பெரிய வாசலைச் சேர்ந்த பொழுதில், வாயிலோர்
உணர்த்தக் கேட்டு - வாயில் காவலாளர்கள் தெரிவிக்க அதனைக் கேட்டு, கொற்றவன் -
பயாபதி மன்னன், அருவி தூங்கும் - நீரருவி தன்மீது வழியப் பெற்ற, குளிர்மணிக்
குன்றம்போல - குளிர்ந்த மணிகள் பொருந்திய குன்றத்தைப்போல விளங்குமாறு, முற்றி
நின்று - தொழில் முற்றுப்பெற்று நின்று, இலங்கும் - விளங்குகின்ற, செம்பொன் முடிமிசை
- செம்பொன் மயமான முடியின்மேல், முத்தமாலைக் கற்றைகள் தவழ - முத்தமாலைகளின்
தொகுதிகள் தவழாநிற்க, சென்று ஓர் கனககூடத்து இருந்தான் - போய் ஒப்பற்ற
பொன்மயமான மண்டபத்திலே அமர்ந்திருந்தான், (எ - று.)


(பாடம்) 1. வாயிலோன். 2. உணர்த்தக்கேட்டே. 3. அருளித் தூங்கும். 4. சென்றார்.