விஞ்சைத் தூதனும் விசயதிவிட்டர்களும் வந்த செய்தியைத் தெரிவிக்கக் கேட்ட பயாபதி மன்னன் விஞ்சைத் தூதனை வரவேற்பதற்குத் தகுதியான ஓர் அழகிய மண்டபத்திலே சென்றிருந்தனன், அம்மண்டபத்திற்கு அரசன் செல்லும்போது, அரண்மனையில் தொங்கவிடப் பெற்றிருந்த முத்துமாலைகள் அரசனது முடியின்மேல் தழுவி நின்றன. அக்காட்சி அழகிய குன்றிலே வெள்ளிய நீரருவிகள் இழிதலைப்போன்று விளங்கியதென்கிறார். மற்று என்பதை அசை நிலையாகவோ பிரிநிலையாகவோ கொள்ளினும் அமையும். போழ்து - பொழுது என்பதன் மரூஉ. |
(இ - ள்.) மன்னவ குமரரோடும் - அரச குமாரர்களாகிய விசயதிவிட்டர்களுடனே, விஞ்சையன் - வித்தியாதரனாகிய மருசியானவன், மகிழ்ந்து - மகிழ்ச்சியுற்று, வையத்து - நிலவுலகத்திலே, இன்னருள்புரிந்த வேந்தன் - யாவரிடத்திலும் இனிய அருளைச் செய்து வருகின்ற பயாபதி மன்னவனுடைய, இடை அறிந்து - செவ்வியறிந்து, இனிதின் எய்தி - அண்டு மகிழ்ச்சியோடு அடைந்து, கல்நவில் தோளினான் தன் - மலையை ஒத்த தோளையுடையவனாகிய பயாபதி மன்னனுடைய, கழல் அடி - வீரக் கழலையணிந்த கால்களை, தொழுது நின்றான் - வணங்கி நின்றான். அன்னவர்க்கு - அங்கு அடைந்த மூவருக்கும், இருக்கை தானம் - அமருவதற்குரிய இருக்கையை, அரசனும் அருளிச் செய்தான் - பயாபதி மன்னனும் அவர்கட்குக் கொடுத்தான், (எ - று.) யானையினின்றும் இறங்கிய மருசியானவன் விசயதிவிட்டர்களுடன் பயாபதி மன்னனிடஞ் சென்று அவனை வணங்கி நின்றான். அரசன் அம்மூவரும் அமர்தற்குரிய இருக்கையைக் காட்டினான் என்க; இறை - காணுதற்குரிய பொழுது என்று பொருள் கொள்ளல் சிறப்புடையது. |