பக்கம் : 368
 

அடுத்த செய்யுளில் வாசிக்கின்றான் என்பதனோடு சென்று இயையும். ஓலையிற் செய்தியை
எழுதி அதனைச் சுருள்வைத்து, அவ்வோலைச் சுருளை எளிதிற்பிரிக்க முடியாதவாறு
அரக்கைக் கொண்டு இலச்சினையிட்டுத் திருமுகம் அனுப்பிச் செய்தி தெரிவித்தல்
பண்டைக்கால வழக்கு; மதிவரன். மேன்மையான அறிவையுடையவன் என்று பொருள்தரும்.
அரசர்களின் அவையில் திருமுகம் எழுதுதற்கும் படித்தற்கும் ஆள்கள் இருப்பர்.

( 82 )

மதிவரன் திருமுகவோலையைப் படித்தல்

513. நிகரிகந் தழகிதாகி நெரிவடுப் படாத வேழப்
புகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா
மகரவாய் மணிக்கட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட
பகரரும் பதங்கள் நோக்கிப் பயின்றுபின் வாசிக் கின்றான்.
 

     (இ - ள்.) நிகர் இகந்து - ஒப்புநீங்கி, அழகிது ஆகி - அழகையுடையதாய், நெரி
வடுபடாத - சுருட்டுதலால் நெரிந்து குற்றப்படாததும், வேழம்முகம் புகர் பொறியது ஆய -
யானையின் முகப்புள்ளி போன்ற எழுத்துக்களையுடையதான அந்தத் திருமுகத்திலுள்ள
புகழ்ந்தசொல் அகத்துப் போகா - வெறும் புகழ்ச்சியான சொற்கள் இல்லாதனவும்,
மகரம்வாய் மணிக் கண் செப்பின் - மகரம்போன்ற வாயைக் கொண்டதும் மணிகளைத்
தன்னிடத்திற் பதிப்பிக்கப் பெற்றதுமான செப்பிலே உள்ள, மசிகலந்து எழுதப்பட்ட -
மைகொண்டு எழுதப்பெற்றனவுமான, பகர்அரும் பதங்கள் - சொல்லுதற்கு அருமையான
அத்திருமுக மொழிகளை, நோக்கி - பார்த்து, பயின்று - தான் படித்துப் பழகி, பின்
வாசிக்கின்றான் -பிறகு வாய்விட்டுப் படிக்கலானான், (எ - று.)
மருசியால் கொண்டுவரப்பெற்ற திருமுகவோலையின் செய்தி யானையின் முகப்புள்ளிகளைப்
போன்ற குண்டு குண்டான எழுத்துக்களாக எழுதப்பெற்றிருந்தது. ஓலையைச்
சுருட்டியதனால் அவ்வோலை நெரிந்து வடுப்படாமல் விளங்கியது. அதனை மதிவரன்
முன்னர்த்தான் படித்து உள்ளத்தமைத்த பிறகு வாய்விட்டுப் படிக்கலானான் என்பதாம்.
திருமுக வோலையில் வீண்புகழ்ச்சியான சொற்கள் இல்லையென்பார் ‘புகழ்ந்த சொல்
அகத்துப் போகா‘ என்றார். பொறியது - எழுத்துக்களையுடையது. வேழப்புகர் முகப்பொறியது என்பதற்கு. வேழப்புகர் முகத்தை முத்திரையாக இடப்பட்ட தென்றலும் ஒன்று;

( 83 )