(இ - ள்.) இரத நூபுரத்தை ஆளும் - இரத நூபுர நகரத்தை அரசாட்சி புரிகின்ற, காதுவேல் மன்னன் ஓலை - பகைவரைக் கொல்லும் வேற்படையையுடைய சுவலனசடி என்பவனது ஓலையை, போதனத்து இறைவன் காண்க - போதன நகரத்திற்கு அரசனாகிய பயாபதி மன்னன் பார்க்க, கழலவன் தனக்கு நாளும் - வீரக்கழலை யணிந்தவனாகிய பயாபதி மன்னனுக்கு எப்போதும், அடிசில் ஆதிய - சோறு முதலாகிய, ஒண்கேழ் - ஒண்மை விளங்குகின்ற, அஞ்சனம் உள்ளிட்ட எல்லாம் - கண்ணுக்கு இடும் மையை உள்ளிட்ட எல்லாப் பொருள்களும், தீது தீர்காப்பு பெற்று - குற்றம் நீக்கிய காவலையடைந்து, செல்க என விடுத்தது - செல்க வென்று வேண்டி உய்த்ததாகும், (எ - று.) அடிசில், வாழ்க்கைக்கு இன்றியமையாப் பொருள்; அஞ்சனம், இருப்பினும் இராமலிருப்பினும் இடையூறின்று ஆகவே, அடிசில் முதல் அஞ்சனம் ஈறாகவுள்ள எல்லாப் பொருளும் என்றவாறு. இரதநூபுர மன்னவனாகிய சுவலனசடி என்பவன், போதன நகரத்து மன்னவனாகிய பயாபதியரசனுக்கு எல்லாப்பொருள்களும் பாதுகாப்புப் பெறவேண்டும் என்று வேண்டி விடுத்த ஓலை இஃது என்பதாம். அக்காலத்து மன்னவர்கள் தம்மைப் போன்றார்க்குத் திருமுகம் எழுதியனுப்பும்போது இவ்வாறு வாழ்த்துக்கூறும் முறையை மேற்கொண்டிருந்தனர் இக்காலத்திலும் இவ்வழக்குச் சிலவிடத்து வேறொரு வகையில் வழங்குகின்ற தென்று தெரிகின்றது. அன்று + ஏ: ஈற்றசை. |