அசைகின்ற பிடரிமயிரையுடைய, இவுளி - குதிரைபூட்டிய, திண்தேர் வல்லவன் - திண்ணிய தேரைச் செலுத்துவதில் வல்லவனாகிய, இளைய நம்பிக்கு - உன் மக்களில் இளையவனும் எல்லாப் பண்புகளிலும் சிறந்தவனுமாகிய திவிட்டனுக்கு, உரியள் ஆ வழங்கப்பட்டாள் - இல்லறத்திற்குரிய மனைவியாக என் மகளாகிய சுயம்பிரபை கொடுக்கப்பட்டாள், மல்லக மார்பினான் - வலிமையைத் தன்னிடத்தே கொண்ட மார்பையுடையவனாகிய பயாபதி மன்னன், தன் மருமகள் இவளைக் கூவி - தன் மருமகளாகிய இவளையழைத்து, வல்லிதிற் கொடுக்க - விரைவில் தன் மகனுக்குத் திருமணஞ் செய்துகொடுப்பானாக!, தன் கண்ணி வாழ்க - அந்தப் பயாபதி மன்னனுடைய மாலை வாழ்க, (எ - று.) என்னுடைய பெண்ணை நின் இளையமகனுக்கு வாழ்க்கைத் துணைவியாகக் கொடுப்பதற்கு முடிவுசெய்தேன். ஆகையால் நீ இவளை நின் மகனுக்குத் திருமணஞ் செய்துகொடுப்பாயாக! என்பது திருமுகச் செய்தி. இறுதியில் கண்ணிவாழ்க என்று வாழ்த்துக் கூறப்பட்டது. மாலையை வாழ்த்துதலும் அஃதணிந்தானை வாழ்த்துதலோடு ஒக்கும். இவ்வாறு வாழ்த்துக் கூறுதல் மரபு. “வாழ்க அங்கண்ணி மாதோ“ என்பதும் காண்க. கண்ணி - முடியிற் சூடும் மாலை. |
(இ - ள்.) என்று அவன் ஓலை வாசித்து இருந்தனன் - மேற்கூறியவாறு அந்த மதிவரன் திருமுகச் செய்தியைப் படித்து முடித்தான், உரம்கொள் தோளான் இறைவன்கேட்டு - வலிய தோள்களையுடையவனாகிய பயாபதி மன்னன் கேட்டு, வென்றி அம்பெருமை விச்சாதரர் என்பார் - வெற்றியையும் அழகிய பெருமையையும் உடைய வித்தியாதரர்கள் என்று சொல்லப் பெறுபவர்கள், எம்மின்மிக்கார் - எம்மைப் பார்க்கினும் எவ்வகையினும் சிறந்தவர்கள், இன்று - இப்போது, இவன் இவ்வாறு விடுத்தது - இந்தச் சுவலனசடியரசன் இப்படித் திருமணத் தூது விடுத்தது, என்கொல் ஓ என்று சிந்தித்து - யாது காரணமோ என்று எண்ணமிட்டு, மற்று - மேலே, ஒன்றும் உரைக்கமாட்டாது இருந்தனன் - ஒன்றும் சொல்ல முடியாமல் இருந்தான். (எ - று.) |