(இ - ள்.) ஓர் கருமம் வேண்டி - மனிதர்களிடத்தில் ஒரு காரியத்தை விரும்பி, முன்னம் மொழிப ஏல் - முதலில் சொன்னால், (சொல்லுபவர்) என்னவர் ஏன் உம் ஆக - எவ்வளவு மேன்மையுடையவர்களாக இருந்தாலும், மனிதர் தம்மால் - மனிதர்களால், இகழ்ந்திடப் படுபபோல் ஆம் - இகழ்ந்திடப்படுவார்கள் போலும், உலக வார்த்தை - உலகமொழி, அன்னதே - அவ்வாறேயுள்ளது. ஆவது - அவ்வாறாதலை, அறியும் வண்ணம் - அறிந்துகொள்ளும்படி, மின்நவின்று இலங்கும் வேலோய் - மின்னலின் தன்மை பழகி விளங்குகின்ற வேற்படையையுடையவனே, இன்று - இப்பொழுது, நின் உழை விளங்கிற்று - உன்னிடத்திலே விளக்கமாய் விட்டது, (எ - று.) மனிதர்களிடத்தில் ஒருகாரியத்தை நாடிச்சென்றால் எவ்வளவு பெருமை யுடையவர்களாக இருந்தாலும் அவர்கள் மனிதர்களால் இகழ்ச்சி செய்யப் பெறுவார்கள் என்னும் எண்ணம் வித்தியாதர உலகத்தில் இருந்தது. அஃது உண்மையாதலை இப்பொழுது அறிந்து கொண்டேன் என்று மருசி கூறுகிறான். அவன் இவ்வாறு கூறக் காரணம் பயாபதி மன்னனுக்கு வியப்பினால் ஏற்பட்ட திகைப்பும் மருசியின் பதற்றமுமேயாகும். நின்னுழை : உழை ஏழனுருபு. அன்று + ஏ: தேற்றம்; ஈற்றசையுமாம். |
(இ - ள்.) மாவிரி தானை மன்னா - குதிரைகள் மிகுந்த படையை உடைய அரசனே!, பூவிரி - மலர்கள் அலர்ந்த, உருவம் கண்ணி - அழகிய முடிமாலையைப் பூண்டு, பொலம்குழை இலங்கு சோதி - பொன்னாலியன்ற குழையென்னும் காதணி விளங்குகின்ற ஒளி வடிவமுள்ள, தேவரே எனினும் - தேவர்களாகவேயிருந்தாலும், தோன்ற சில்பகல் செல்ப ஆயில் - தமக்குத் தெரியச் சில நாட்கள் அடுத்தடுத்து வருவார்களேயானால் அவர்களையும், ஏவரே போல நோக்கி - ஒன்றுக்கும் பற்றாத எவரைப்போன்றோ பார்த்து, இகழ்ந்து உரைத்து - அவரை இகழ்ந்து பேசி, எழுவது அன்றே - எழுந்து போவதல்லவோ, மனிதரது இயற்கை என்றான் - மக்களுடைய இயல்பான பண்பாக இருக்கின்றது என்று கூறினான், (எ - று.) |