மேற்செய்யுளில் வலியவரும் எத்தகையோரையும் பொருட்படுத்தா திகழ்தல் மக்களுடைய இயற்கை யென்பது நின்னிடத்தில் விளங்குகின்றது என்று கூறிய மருசி, இச்செய்யுளில் பழக்கப்பட்டவர்கள் தேவர்களாக இருந்தாலும் மனிதர்கள் அவர்களை ஒரு பொருட்படுத்த மாட்டார்கள் என்று கூறுகிறான். சுவலனசடி மன்னனுக்கும் பயாபதி மன்னனுக்கும் முன்னரே பழக்கம் உண்டு என்று இச்செய்யுளால் ஊகிக்கலாம். மாவிரி - என்பதற்கு யானைகள் மிகுந்த என்று பொருள்கூறினும் பொருந்தும். “பொன்னென் கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்“ என்பதனால் பொன்குழை பொலங்குழை என்று ஆயிற்று. |
(இ - ள்.) வரைமலி வயங்கு தோளாய் - மலையை ஒத்து விளங்குகிற தோள்களையுடையவனே!, வியாதியால் மயங்கினார்க்கு - நோயினாற் பீடிக்கப் பட்டவர்களுக்கு, சுரைமலி அமிர்தம் தீம்பால் - ஆவின்மடியிலே மிகுந்துள்ள அமிர்தம் போன்ற இனியபாலை, சுவை தெரிந்து - உருசியை உணர்ந்து, உண்ணல் ஆம் ஓ - பருகுதல் இயலுமோ, விரைமலி - நறுமணம் மிகுந்து, விளங்கு - விளங்குகின்ற, விஞ்சையர் செல்வம் தானும் - வித்தியாதரர்களுடைய செல்வமும்; நுரைமலி - நீர்க்குமிழின் தன்மை மிகுந்ததும், பொள்ளல் - ஒன்பது ஓட்டைகளையுடையதுமான, யாக்கை மனித்தர்க்கு - உடலையுடைய மனிதர்கட்கு, நுகரல் ஆமோ - அனுபவித்தல் கூடுமோ? (எ - று.) பித்தம் முதலிய நோய்களினால் பற்றப்பட்டவர்களின் நாக்குச் சுவையுணரும் தன்மையை இழந்துவிடும். அத்தகையோர்க்கு இனிப்புப் பொருளும் கசப்புடையனவாகத் தோன்றும். ஆகவே அவர்கள் ஆன்பால் முதலியவற்றின் சுவையறிந்துண்டல் இயலாததாகமுடியும். அவ்வாறே வித்தியாதரர்களுடைய நுகர்தற்கரிய பெருஞ்செல்வத்தை ஓட்டையுடலை யுடைய மனிதர்களால் நுகர முடியாதென்கிறான் மருசி. சுரை, பாலைச் சுரப்பதனால் பசு முதலியவற்றின் மடிக்குக் காரணப்பெயர். தண்ணீரில் நுரைகளால் உண்டாகும் கொப்புளம் நீர்க்குமிழி யெனவும் நுரை யெனவும் கூறப்படும். |