பக்கம் : 375
 

பெரிய மதயானையின் ஆற்றலை யானைக்குட்டி அறியாது. அதைப் போன்று வித்தியாதரர்களின் பெருமையை மனிதர்கள் உணரமாட்டார்கள். மனிதர்கள் தவஞ் செய்தாலும்கூட வித்தியாதரர்கள் போன்று பெருமை யடைதல் இயலாது என்கிறான் மருசி. களபம் - முப்பதாண்டு அகவைக்குட் பட்ட யானைக்குட்டி. யானைக்கு அகவை ஆயிரம் என்கின்றனர். ‘மரங்கெடத் தின்றுவாழும்‘ என்னும் தொடர் யானைக்குட்டியின் சிறுமையைப் புலப்படுத்தியது களபக்கு; அத்துச் சாரியை தொக்கது.

( 92 )

523. உள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்
ஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்
வெள்ளியஞ் சிலம்பி னெங்கோன் விடுத்ததே யேது வாக
1எள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்.
 

     (இ - ள்.) உள்ளிய - மதிக்கத்தக்க, மரங்கொள்சோலை - மரங்களைக் கொண்ட
சோலையை உடைய, மண்மிசை - இந்நிலவுலகத்தில், உறையும் மாந்தர் - வாழுகின்ற
மனிதர்கள், ஒள்ளியரேனும் - கூர்த்த அறிவுடையராக இருந்தாலும், தக்கது - தகுதியான
செயலை; உணர்பவர் இல்லை போலாம் - அறியும் ஆற்றல் உடையாரிலர் என்று
தெரிகின்றது, இறைவ - அரசனே!, வெள்ளியஞ்சிலம்பின் எங்கோன் - வெள்ளிமலையிலே
உள்ள எம்முடைய தலைவன், விடுத்ததே - வலியத் தூதாக விடுத்ததையே. ஏதுவாக -
காரணமாகக்கொண்டு, எள்ளி - இகழ்ந்து, ஓர் உரையும் ஈயாது இருந்தனை என்றான்-ஒரு
மொழியும் பதிலுரையாமல் இருந்தாய் என்று கூறினான், (எ-று.)
உலகத்து மனிதர்கள் அறிவுடையவர்களாக இருந்தாலும், தக்கது தகாதது ஆகிய
செயல்களை அறியக்கூடியவர்கள் இலரென்று தெரிகிறது. எம் அரசன் வலியத்
தூதுவிடுத்ததையே நீ ஒரு காரணமாகக் கொண்டு அவனை இகழ்ந்து
பதிலுரையாமலிருக்கிறாய் என்கிறான் மருசி. பயாபதி மன்னன் திகைத்திருந்ததையே
காரணமாகக்கொண்டு மருசியானவன் இவ்வாறு அரசனைத் தாக்கிப்பேசி நிறுத்தினான்.
உள்ளிய மரங்கொள் சோலை என்ப தற்குக் கற்பகச் சோலை எனவும் பொருள் உரைப்பர்.
அது சிறந்ததன்று.

( 93 )

பயாபதி மன்னன் பதில் உரைத்தல்

524. ஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்
தேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் 2வேண்டா
 

(பாடம்) 1. ஒள்ளி யோர் என்றும் பாடம். 2. வேண்டாம்.