பக்கம் : 379
 

நுகர்தற்கு ஏற்றதாகும், எப்படி முயறுமேனும் - மக்களாகிய நாங்கள் எவ்வளவு முயற்சி
செய்தோமென்றாலும், எங்களுக்கு எய்தல் ஆகாது - எங்களால் அந்தச் செல்வத்தை
அடைய முடியாது, அப்படி - அவ்வாறே, நீயும் முன்னர் மொழிந்தனை அன்றே - நீயும்
முன்பு சொன்னாயல்லவா, என்றான் - என்று கூறினான். (பயாபதி மன்னன்) (எ - று.)

முற்பிறப்பில் தவஞ்செய்தவர்களுக்குத்தான் விஞ்சையராகி இன்புற முடியும். மக்களாகப
பிறந்தோர் எவ்வளவு முயற்சிசெய்தாலும் விஞ்சையர் செல்வத்தைத் துய்த்தல் இயலாது;
இவ்வாறே நீயும் முன்பு சொன்னாயன்றோ, என்று பயாபதி மன்னன் தான்
பேசாதிருந்ததற்குத் தக்க காரணம் கூறினான். “விஞ்சையர் செல்வந்தானும் நுரைமலி
பொள்ளல் யாக்கை மனிதர்க்கு நுகரலாமே“ என்று முன்னர்க் குறிப்பிட்டவைகளை
யெல்லாம் உள்ளத்திற் கொண்டு பயாபதிமன்னன் இவ்வாறு பதிலுரைத்தான். நோற்றார் :
வினையாலணையும் பெயர். நோல் : பகுதி. முயறும் : தன்மைப் பன்மை வினைமுற்று :
முயல் - பகுதி. தும் - விகுதி.

( 98 )

விஞ்சைச் சாரணன் நாணிச் சினம் மாறுதல்

529. 1இறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொருந்தாக்
கறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்
பொறையினாற் பெரியன் 2பூபன் சிறியன்யா னென்று நாணி
3அறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்.
 

     (இ - ள்.) இறைவன் - பயாபதி மன்னவன், ஆங்கு - அவ்வாறு, உரைத்த -
சொன்ன, சொல் - சொல்லை, கேட்டு - செவியிலேற்று, என்னை பாவம் - என்ன தீவினை,
காவலன் கருதிற்று ஓரேன் - இந்தப் பயாபதி மன்னவன் எண்ணியதை நான்
அறிந்துகொள்ளாமற் போனேன், பொருந்தா - சொல்லுதற்குத் தகுதியில்லாத, கறையவாம்
மொழிகள் சொன்னேன் - குற்றமுடையனவாய சொற்களைக் கூறினேன், (நான் கடுஞ்சொற்
கூறியும் சினந்துகொள்ளாத இந்த) பூபன் - மன்னன், பொறையினால் பெரியன் -
பொறுமைத் தன்மையினால் உயர்ந்தவன், யான் சிறியன் - பொறுமையற்றுப் பேசிய யானோ
சிறுமைக் குணமுடையவனாக இருக்கிறேன், என்று நாணி - என்று வெட்கத்தையடைந்து,
அறிவினால் பெரிய நீரான் - அறிவுடைமை யினால் பெரிய தன்மையுடையவனாய்,
அவிந்தன கதத்தன் ஆனான் - தணிந்து விட்டனவான சினத்தையுடையவனானான்,
(எ - று.)


(பாடம்) 1. இறைவனாங் குரைப்பக் கேட்டே. 2. வேந்தன்.
3. அறிவினால் என்பன பாடபேதங்கள்.