பக்கம் : 380
 

பயாபதி மன்னனுடைய உள்ளக் கிடக்கையை அறிந்த விஞ்சைச் சாரணன், பெறுமையிழந்து
மன்னனைத் தாக்கிப்பேசிய தன்னுடைய புன்மைக்கு நாணி இரங்கிச் சினமுற்றும் மாறினான்.
அறிவுடையார் தம் குற்றத்தைக் கண்டவிடத்து நாணி இரங்குவர். விஞ்சைச் சாரணன்
அறிவுடையோன் ஆதலால் தன்சிறுமையையும் அரசன் பெருமையையும் உணர்ந்து
வருந்தினான். அவிந்தன கதத்தன் ஆனான் என்பது வடமொழிப் போக்கு. அவிந்தன :
பலவின்பாற் பெயர்.

( 99 )

பயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்

530. கிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசரரோடு மண்மேல்
வளர்ந்தொளி 1திவளும் பூணோர் மணவினை முயங்கலில்லென்
றளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்
2குளர்ந்தன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் 3கூறும்.
 

     (இ - ள்.) கிளர்ந்து - மிகுதிப்பட்டு, ஒளி துளும்பும் மேனிக் கேசரரோடு - ஒளி
விளங்குகின்ற உடலையுடைய வித்தியாதரர்களுடனே, மண்மேல் வளர்ந்து -
நிலவுலகத்திலே பிறந்து வளர்ந்து, ஒளிதிவளும் பூணோர் - ஒளி விளங்குகின்ற
அணிகலன்களை அணிந்தவர்களான் மனிதர்கள், மணவினை முயங்கல் இல்என்ற -
திருமணமாகிய செயலைச் செய்துகொள்ளுதல் இல்லை என்று கருதிய, ஐயம் ஈது - இந்த
ஐயத்தை, அளந்து அறிவு அரிய சீரோற்கு - அளந்து அறிய முடியாத சீர்த்தியை யுடைய
இந்தப் பயாபதி மன்னனுக்கு, அகற்றுக என்று - போக்கவேண்டும் என்று, ஆங்கு -
அப்போது, உளர்ந்தனன் - அதற்குஏற்ற சூழ்ச்சியைத் தேடியவனாகி, உணர்வின் ஊக்கி -
தன் அறிவினால் ஆராய்ந்து, உரைக்கிய - அவற்றைச் சொல்லத்துணிந்து, எடுத்துக்கூறும் -
எடுத்துச் சொல்லலானான், (எ - று.)

வித்தியாதரர்களோடு மணவினை செய்துகொள்ளுதல் மனிதர்க்கு வழக்கமில்லை என்று
பயாபதி எண்ணி, மருசி தூதுவந்ததைக் குறித்து ஐயங் கொண்டதைப் போக்குமாறு மருசி
பேசத்தொடங்கினான். பேசும் பல செய்திகளும் அடுத்த செய்யுள் முதல் தொடங்கும்.
கேசரர் - வித்தியாதரர் : விண்ணில் போக்குவரவு செய்தலினால் உண்டாகிய காரணப்
பெயர்.

( 100 )


1. துளும்பு. 2. குளிர்ந்தனன். 3. கொண்டான் என்பன பாடபேதங்கள்.