பக்கம் : 383
 
534. அலகைசா லாதிகாலத் 1தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்
உலகநூல் பலவு மோதி 2 யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ
விலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்
3 திலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் 4 செல்வ என்றான்.
 

      (இ - ள்.) விலகிய கதிர ஆகி - விட்டுவிட்டு ஒளிரும் ஒளிகளை யுடையவாய்,
சுடர்விடு வயிரக்கோலத்திலகம் - ஒளிவிடுகின்ற வயிரத்தினா லியன்ற அழகிய
திலகம்போன்று, வீற்றிருந்த - சிறந்த, கண்ணி திருமுடி செல்வ - மாலையைச் சூடிய
திருமுடியையுடைய செல்வனே!, அலகைசால் - அளவு மிக்க, ஆதிகாலத்து அரசர்கள்
தொடர்ச்சியெல்லாம் - பழங்காலத்தி லிருந்த அரசர்களுடைய தொடர்ச்சிகளையெல்லாம்,
உலக நூல் பலவும் ஓதி - உலகத்தில் வழங்கும் வரலாற்று நூல்கள் பலவற்றையும் கற்று,
உணர்ந்தனன் - அறிந்திருக்கிறேன், உரைப்பக்கேண்மோ - நான் சொல்வதைக்
கேட்பாயாக, என்றான் - என்று கூறலானான், (எ - று.)

நான் முன்காலத்தில் இருந்த அரசர்களுடைய வரலாறுகளையெல்லாம், பல வரலாற்று
நூல்களைப் படித்து உணர்ந்திருக்கிறேன்; ஆகையால் நான் கூறுவதைக் கேட்கவேண்டும்
என்கிறான் மருசி. திலகம் நெற்றிப் பட்டமுமாம்.

( 104 )

மருசி நமியின் வரலாறு கூறுகின்றான்

535. ஆதிநா ளரசர் தங்க 5ளருங்குல மைந்து மாக்கி
ஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று
6நீதிநூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்.
 

      (இ - ள்.) ஆதிநாள் - முற்காலத்தில், அரசர் தங்கள் - அரசர்களுடைய, அரும்
குலம் - அருமையான குலம், ஐந்தும் ஆக்கி - ஐந்தனையும் உண்டாக்கி, ஓதம்நீர் உலகில்
- வெள்ளமான கடல்நீரினால் சூழப்பெற்ற உலகிலே, மிக்க ஒழுக்கமும் தொழிலும் தோற்றி
- மிகப்பலவான ஒழுக்கங்களையும் அவரவர்க்கேற்ற பலவான தொழிலையும் உண்டாக்கி,
தீது தீர்ந்து இருந்த பெம்மான் - குற்றம் நீக்கியிருந்த பெருமானது, திருவடி சாரச் சென்று
- திருவடிகளைத் தன்மனம் பொருந்தப்போய், நீதி நூற்று - அறத்தை ஆராய்ந்து,
உலகம்காத்து - இவ்வுலகத்தைப் பாதுகாத்து, நிலம் திருமலர நின்றான் - நிலமானது
செல்வத்தைக் கொடுக்க நின்றவன், (எ - று.)


(பாடம்) 1. அரசரது. 2. உணர்த்தலின். 3. திலதம். 4. செல்வன் என்பன பாடபேதங்கள். 5. பெருங்குலம். 6. நீதியுற்று என்பன பாடபேதங்கள்.