பக்கம் : 386
 

அருகக்கடவுள் வணக்கம்

539. அலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி
உலகெலாம் நின்னு ளொளித்தாயு நீயே
ஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா
யளித்தாயுங் காத்தாயு 1நீயேவாழி யறவேந்தே.
 

     (இ - ள்.) அறவேந்தே - அறவாழியையுடைய அரசே!, அலகு இலா - எல்லை இலா
- எல்லை இல்லாத, ஞானத்து அகத்து - ஞானத்தினுள்ளே, அடங்க நுங்கி - யாவும்
அடங்குமாறு விழுங்கி [தன்னடைய எல்லையற்ற பேரறிவுக்கு எல்லாவற்றையும்
பொருளாகக்கொண்டு] உலகு எலாம் - எல்லா உலகங்களையும், நின்னுள் ஒளித்தாயும்
நீயே - [வெளித்தோன்றாமல்] நினக்குள்ளே மறையச் செய்தவனும் நீயே யாவாய்,
ஒளித்தாயும் நீயே - உலகங்களையெல்லாம் ஒளித்தவனாக இருந்தும், உயிர்க்கு எலாம் -
எல்லா உயிர்கட்கும், கண்ணாய் அளித்தாயும் - கண்போலச் சிறந்தவனாக இருந்து அருள்
செய்தாயும், காத்தாயும் - காப்பாற்றினவனும், நீயே - நீயே யாவாய், வாழி, வாழ்க,
(எ - று.)

இதுமுதல் மூன்று பாடல்கள் அருகக்கடவுள் வணக்கம், மும் மூர்த்திகளும் அருகக்
கடவுளே என்பது சைநக் கொள்கையாதலால், அளித்தாயும் ஒளித்தாயும் காத்தாயும் நீயே
என்று நமி அருகக்கடவுளைப் போற்றுகிறான்.

( 109 )

532. அழனாறும் வெங்கதிரோ னாண வலராது
நிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே
நின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைகட்
சென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே.
 

      (இ - ள்.) திருமாலே!, அழல்நாறும் - வெப்பந்தோன்றும், வெம்கதிரோன் -
வெவ்விய ஒளிகளையுடைய கதிரவனும், நாண - வெட்கத்தையடையுமாறு, அலராது -
வளர்தலின்றி என்றும் ஒரே தன்மையாய், நிழல்நாறும் மூர்த்தியாய் - ஒளி விளங்குகின்ற
திருவடி வத்தையுடையவனாய், நின்றாயும் நீயே - நிற்பவனும் நீயே; நின்றாயும் நீயே -
நின்றவனாயிருந்தும் நீயே, நிறைபொருள் எல்லைக்கண் - நிறைந்த பொருள்களின்
எல்லையிடத்து, சென்றாயும் - சென்றவனாயும், வென்றாயும் - வினைகளை வென்றவனாயும்
இருப்பாய், நீயே - நீயே யாவாய், வாழி - நீ வாழவாயாக! (எ - று.)


(பாடம்) 1. நீயேலாழி.