பக்கம் : 387
 

திருமால் என்பது அருகக்கடவுளின் திருப்பெயர்களுள் ஒன்று. அருகனுடைய
திருவடிவத்தின் ஒளிக்குமுன் கதிரவனுடைய ஒளியும் நிற்கமாட்டாது என்ற கருத்தினால்,
‘வெங்கதிரோன் நாண நாறும் மூர்த்தியாய்‘ என்று கூறப்பட்டது. அவதி ஞானத்தால்
அருகக் கடவுள் எல்லாப்பொருளை யும் காணவல்லவனாதலால் ‘நிறைபொருள்
எல்லைக்கண் சென்றாய்‘ என்றார். நின்றாயும் சென்றாயும் என அமைந்தது ஓர் அழகு.

( 110 )

541. நிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்
குறைதலி லின்பங் கொடுப்பாயு நீயே
கொடுப்பாயு நீயேயெங் குற்றேவல் வேண்டாய்
விடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே.
 

     (இ - ள்.) வென்ற பெருமானே - வினைகளை வென்ற பெருமையை யுடையவனே!,
நிறைதரு கேவலத்தோய் - நிரம்பியுள்ள கேவலஞானம் உடையவனே!, நின் அடியார்க்கு
எல்லாம் - உன்னுடைய அடியவர்களுக் கெல்லாம், குறைதல் இல் - குறைதல் இல்லாத,
இன்பம் கொடுப்பாயும் நீயே - வீடுபேற்றின்பத்தைக் கொடுப்பவனும் நீதான், கொடுப்பாயும்
நீயே - அடியவர்கட்குக் குறைதலில்லாத இன்பத்தைக் கொடுப்பவனாகவிருந்தும்,
எம்குற்றவேல் வேண்டாய் - எம்முடைய சிறிய ஏவல் தொழிலை விரும்பாமல், விடுத்தாயும்
- விட்டுவிட்டவனும், நீத்தாயும் நீயே - எல்லாவற்றயும் துறந்தவனாயிருப்பவனும் நீயேதான்,
(எ - று.)

தன் அடியவர்கட்கு அருகக்கடவுள் குறைதலில்லாத இன்பத்தைக் கொடுப்பவனாக இருந்தும்
அவன் எல்லாவற்றிலும் நிரம்பியவனாதலால் தன் அடியவர்களிடத்தில் குற்றேவலை
எதிர்பாராமல் இருக்கிறான் என்றார். அவன் அவ்வாறிருத்தல் எல்லாவற்றையும்
துறந்தவனாக இருத்தலால்தான் என்று காரணத்தையும் விளக்கினார். வேண்டாய் :
முற்றெச்சம்.

( 111 )

நமிபாடிய இசையின் தன்மை

542. என்றவன் பாடக் கேட்டே யிறைஞ்சின குறிஞ்சி யேகா
நின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா
1மன்றுமெய் மறந்து சோர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்
வென்றவன் றியானத் 2துள்ளான் வியந்திலன் சிறிதும்வேந்தே.
 

(பாடம்) 1. நனறுமெய். 2. துள்ளால்.