பக்கம் : 388
 

     (இ - ள்.) என்று - இவ்வாறு, அவன் - அந்த நமியென்பான், பாடக்கேட்டு -
அருகக்கடவுளைப் புகழ்ந்து பாடுதலைக்கேட்டு, விலங்குசாதி - விலங்கு வகைகள்,
இறைஞ்சின - அவ்விசைப்பாட்டிற்குத் தாம் தலைவணங்கி நின்றன, குறிஞ்சி ஏகா நின்றன
- தாம் நின்றிருந்த குறிஞ்சி நிலத்தைவிட்டு அப்பாற் செல்லாமலும் அசைவற்று
நின்றிருந்தன. பறவை எல்லாம் - விண்ணிற் பறந்துகொண்டிருந்த பறவைகள் யாவுங்கூட,
நிலம் கொண்ட - நிலத்திற்கு இறங்கி வரலாயின, அன்று - அப்போது, கின்னரர்
மெய்மறந்து சோர்ந்தார் - கின்னரர் என்ற வகுப்பார் தம்மைத்தாமே மறந்து நிலை
தளர்ந்து நின்றார்கள், அமரர் தாழ்ந்தார் - தேவர்களும் அவ்விசைப்பாடலுக்குப்
பணிந்தார்கள், வேந்தே - அரசே, வென்றவன் - ஐம் பொறிகளையும் வென்றவனும்,
தியானத்துள்ளான் - தியானத்தில் இருப்பவனுமாகிய அருகன், சிறிதும் வியந்திலன் -
நமியின் இசைப்பாட்டைக் குறித்துச் சிறிதும் வியப்புக்கொண்டான் அல்லன், (எ - று.)

நமி பாடிய இசையைக் கேட்டு விலங்கு பறவை முதலியனவும் கின்னரர் தேவர்
ஆகியோரும் தம்மை மறந்தனர். அருகக்கடவுளோ அவ்விசைப் பாட்டைக் குறித்துச்
சிறிதும் வியப்புக்கொள்ளவில்லை, என்பதாம். வென்றவனும் தியானத்துள்ளவனும்
அருகனென்று கொள்ளாமல் நமி என்று உரைப்பினும் பொருந்தும். குறிஞ்சி இறைஞ்சின
என்று பிரித்துக் குறிஞ்சி முதலிய மரங்கள் தாழ்ந்தன எனினும் அமையும். கின்னரர்
என்பார் குதிரையுனுடைய முகமும் மனிதருடைய உடலும்பெற்ற ஒரு தேவசாதி; இத்தேவ
சாதியினர் எப்போதும் ஆணும் பெண்ணுமாகவே யிருப்பர். கின்னரம் என்னும் இசைக்
கருவியை வைத்துப் பாடிக்கொண்டிருக்கும் காரணத்தினால் கின்னரர் என்னப் பெற்றனர்.
இசையின் தன்மையை அசையும் பொருள் அசையாப்பொருள் ஆகிய
எல்லாப்பொருள்களும் அறியும் என்பர்.

( 112 )

நமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்

543. 1மணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்
குணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்
கணநிரைத் 2திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ் ஞூறு
3பணநிரைத் 4திலங்கப் புக்கான் 5பணதர ரரச னன்றே.
 

     (இ - ள்.) மணம் நிரைத்து இலங்கும் தாரோய் - வாசனையைத்
தொடர்ச்சியாகக்கொண்டு விளங்குகின்ற மாலையை அணிந்தவனே! அவன் - அந்த நமி,
உலோகநாதன் குணம் நிரைத்து உலகங்கட்கெல்லாம் தலைவனான அருகக்கடவுளின்
குணத்தைத் தொடுத்து, இசைத்த கீதம் கேட்டலும் - பாடிய


(பாடம்) 1. மணநிலத்து. 2. இலங்குகாய். 3. பணநிலத்து. 4. இலங்கப் போந்தான. 5. பணதரற்கரசனாவான்.