பக்கம் : 389
 

இன்னிசையைக் கேட்ட உடனே, பணதரர் அரசன் - பாம்புகட்குத் தலைவனாகிய
ஆதிசேடன், மணிகொள் கோவைகணம் - மாணிக்கத்தினால் இயன்ற கோவைக் கூட்டத்தை
ஒத்து, நிரைத்து - வரிசையாக, இலங்கும் - விளங்குகின்ற, காய்பொன் முடிமிசை -
காய்ச்சின பொன்போன்ற முடியின் மீது, ஈர்ஐஞ்ஞூறு பணம் நிரைத்து - ஆயிரம்
படங்களைத் தொகுதியாகக் கொண்டு, இலங்க புக்கான் - இலங்குமாறு அங்கு வந்தான்,
(எ - று.)

நமியின் இசையைக் கேட்டவுடன் ஆதிசேடன் தனது ஆயிரம் முடிகள்மீதும் ஆயிரம்
மணிகள் விளங்க நமியின் முன்னே தோன்றினான். பணதரர் - படத்தைத் தாங்குபவர்;
நாகர்க்குக் காரணப்பெயர். ஆயிரம் முடிகளின்மீதும் ஆயிரம் மணிகள் விளங்குவது,
மணியினால் இயன்ற கோவைக்கணம் : நிரைத்து இலங்குவது போன்றது. மற்று, அன்றே :
அசைநிலைகள்.

( 113 )

நமியை வணங்குதல்

544. பன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி
மின்னவிர் 1வயிரச்சூட்டி விடுசுடர் மணிப்பொற் பூணான்
2தன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்
மன்னர்கட் கரசன் முன்னை 3வலங்கொடு வணக்கஞ் செய்தான்.
 

     (இ - ள்.) பன்னகர் உலகம் காக்கும் - நாகரின் உலகத்தைப் பாதுகாக்கின்ற,
பாய்கதிர் - பரவுகதிர் - பரவுகிற ஒளிகளையுடைய, பசும்பொன்மேனி - பசும்பொன்னை
யொத்த உடலுடனே, மின் அவிர்வயிரச்சூட்டு - மின்னல்போல் விளங்குகின்ற வயிரம்
போல் உறுதியான உச்சிக்கொண்டையாகிய, சுடர்விடு மணி பொன்பூணான் - ஒளி
விடுகின்ற மணிகள் பதித்த பொற்பூணையுடைய ஆதிசேடன், தன் நிகர் இகந்த தோன்றல்
பரமன் பாதம் சரண்என - தனக்கு ஒப்பில்லாது விளங்கு பவனான கடவுளின் அடிகளே
அடைக்கலம் என்று சொல்லி, மன்னர்கட்கு அரசன் முன்னை - அரசர்கட்கு அரசனான
நமிச்சக்கர வர்த்தி முன்னே, வலம்கொடு - வலஞ்செய்து, வணக்கஞ் செய்தான் -
வணங்கினான், (எ - று.)

ஆதிசேடன், அருகக்கடவுளுடைய தியானத்திலே ஈடுபட்டிருக்கும் நமியை வணங்கினான்.
தன்னிகர் இகந்த தோன்றல் ஆதிசேடன் எனினும் அமையும். இனி மன்னர்கட்கு
மன்னனாகிய நமி, தன்நிகர் இகந்த தோன்றலாகிய பரமனது பாதம் சரண்
என்னாநிற்கையில், பூணான் அம்மன்னவனை வலங்கொண்டு வணக்கஞ்செய்தான்
எனினுமாம்.

( 114 )


(பாடம்) 1. வயிரக் கோட்டு. வயிரப்பூணான். 2. தன்னகர்.
3. வலங்கொண்டு.