பக்கம் : 393
 

     (இ - ள்.) எம் அதிபதி - எம்முடைய தலைவனாகிய சுவலனசடி, ஆங்கவன் குலத்து
உளான் - பெருமைபெற்ற அந் நமியினுடைய குலத்திலே பிறந்துளான், அவனோடு
ஒப்புஆய் - அந்த நமி என்பவனோடு சமமாய், ஓங்கிய குலமும் - உயர்ச்சி பெற்ற
குலத்தையும், செல்வப் பெருமையும் - செல்வச்சிறப்பையும், நீயும் உடையை - நீயும்
உடையவனாக விருக்கிறாய், ஈங்கு இப்பொழுது இருகுலத்துளீர்க்கும் இவ்வாறு உயர்ந்த
இரண்டு குலத்திலே பிறந்துள்ள நும் இருவருக்கும், கருமம் வந்து - திருமணமாகிய
வினைப்பயன்வந்து, இசைத்த போழ்தில் - இருவரையும் தொடர்புபடக்
கட்டுப்படுத்தியபோது, நீங்குஅரு - நீங்குதல் இல்லாத, நறுநெய் - நறுவிய நெய்யோடு,
தீம்பால் - இனிய பாலை, சொரிந்தது - ஊற்றியதாகிய, ஓர் நீர்மைத்து - ஒப்பற்ற
தன்மையை உடையது, என்றான் - என்று கூறி முடித்தான் (எ - று.)

ஆதிநாள் என்னும் பாடல்முதல் இதுவரையிலும் மருசி என்னும் விஞ்சைத்தூதுவன்,
சுவலனசடி என்ற இரதநூபுர நகரத்து விஞ்சை மன்னனுடைய வழிமுறை வரலாற்றைக்கூறி,
அவனோடு தொடர்ப்பு நுமக்கு ஏற்றதே என்று கூறிமுடித்தான். நெய்யும் பாலும்
ஒன்றுபடுமாயின் சுவை மிகுமாறு போல, உயரிய குலத்தினராகிய நீவிர் இருவரும்
ஒன்றுபடின் சிறப்புண்டாமென்று மருசி கூறினான்.

( 119 )

பயாபதியின் வரலாறு கூறத்தொடங்கல்

550. தங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி
னுங்குல நிலைமை யெல்லா 1நூலினீ யுரைத்த வாறே
எங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு
பொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லுற்றான்.
 

     (இ - ள்.) தம்குலம் தொடர்ச்சி கூறி - தம்முடைய குலத்தின் வரலாற்றைச்
சொல்லிவிட்டு, தானவன் - விஞ்சைச்சாரணன், இருந்தபோழ்தில் - பேச்சொழிந்த அளவில்,
நும்குல நிலைமை எல்லாம் - உங்களுடைய குலத்தின் தன்மைகளையெல்லாம், நூலின் -
நூலினாலறிந்தபடி, நீ உரைத்த வாறே - நீ தெரிவித்தபடியே, எம்குல நிலைமை -
எம்முடைய குலத்தின் நிலைமையை யானும் உரைப்பன் என்று - நானுஞ் சொல்வேன்
என்று, எடுத்துக்கொண்டு - சொல்லத்தொடங்கி, பொங்கு அலர்பிணையலான் தன் -
மிகுந்த மலரினால் தொடுக்கப்பட்ட மாலையை உடையவனான பயாபதி மன்னனுடைய,
புரோகிதன் புகலலுற்றான் - வேள்வி செய்வோன் சொல்லத் தொடங்கினான், (எ - று.)

சுவலனசடியின் குலவரலாற்றை மருசி கூறிமுடித்தவுடன், பயாபதி மன்னனுடைய
நிமித்திகனாகிய அங்கதன் என்பவன் பயாபதி மன்னனின் குலவரலாற்றைக்
கூறத்தொடங்கினான். தானவர் என்னுஞ் சொல் அசுரர்களையும் வித்தியாதரர்களையும்
குறிக்கும். தான் அவன் எனப் பிரித்துத் தான் அசையென்று கொள்ளினும் அமையும்.

( 120 )


(பாடம்) 1. நூலினி யுணர்ந்த.