வாகுவலி மன்னன், உலகம் காத்த கோன்முறைவேண்டி - அன்றே - உலகத்தைப் பாதுகாத்த செங்கோல் முறையை விரும்பியல்லவா, கற்றவர் இன்றுகாறும் - அறிஞர்கள் இற்றை நாள் வரையிலும், காவல்நூல் கற்பது எல்லாம் - உலகத்தைப் பாதுகாப்பதாகிய முறைமையை மேற்கொள்வது யாவும், (எ - று.) அருகக்கடவுளின் அருளினால் தோன்றிய வாகுவலி மன்னன் அரசாட்சி முறையைப் பின்பற்றிநின்றே, பின்வந்த அரசர்கள் பலரும் அரசாட்சி புரியலாயினார். காவல்நூல் - அரசாட்சி முறைமை. கற்றவர்; வினையாலணையும் பெயர். |
(இ - ள்.) கொடிவரைந்து எழுதப்பட்ட - கொடியைக் கீற்றுவடிவம் பொருந்துமாறு எழுதப்பட்ட, குங்குமம் குவவு தோளான் - குங்குமக்கலவை பூசப்பெற்ற திரண்ட தோளையுடைய வாகுவலி என்ற அந்த அரசன், இடிமுரசு அதிரும் தானை - இடிபோல ஒலிக்கிற பேரிகையை அடிக்கிற படையையுடைய, இறைத்தொழில் - அரசாட்சித் தொழிலை, மகனுக்கு ஈந்து - தன்னுடைய மகனுக்குக் கொடுத்துவிட்டு, கடிமணம் அனுக்கும் - மிகுந்த நன்மணத்தைக் கீழ்ப்படுத்துகிற, தெய்வக்கழல் அடி - தெய்வத்தன்மை பொருந்திய வீரக் கழலை அணிந்த அடிகளில், அரசர் தங்கள் முடிபொர - வணங்குகின்ற அரசர்களுடைய முடிகள் மோதுதலைச் செய்ய, முனிவின் - வெறுப்பினோடு, தான் முனிவனம்போய் முன்னினான் - தான் முனிவர்கள் தவஞ்செய்யும் காட்டையடைந்தான், (எ - று.) வாகுவலி மன்னன் அரசர்கரசனாயிருந்தும் அந்நிலையிலிராமல் தன்கீழ் அரசாளும் அரசர்கள் தன்னை வணங்கத் தான் தவஞ்செய்தற்கு முனிவர்கள் தவஞ்செய்யும் காட்டை யடைந்தான். திருமுடிமாலையை முடியில் அணிந்த மன்னர்களின் முடி வாகுவலியின் அடிகளிற்படுதலால் அவ்வடிகள் ‘கடிமணம் அனுக்கும் தெய்வக் கழலடி‘ ஆயின; குங்குமக் குழம்பைக்கொண்டு கொடிபோலத் தோளில் எழுதி அழகு செய்து கொள்ளுதல் அக்காலத்திய வழக்கம் என்பர். |